×

சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் பணி தனியாரிடம் ஒப்படைப்பு:  41 கட்டுப்பாடுகள் அறிவிப்பு  தவறுகள் நடந்தால் ஒப்பந்தம் ரத்து

சென்னை, நவ.30: முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை சென்னை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தனியார் மூலம் வழங்கவும், தவறுகள் நடந்தால் ஒப்பந்தத்தை ரத்து செய்வது என்றும் சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் வளாக கூட்டரங்கில் நேற்று நடந்தது. துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரத்தின் போது கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில் பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு மேயர் பிரியா பதில் அளித்து பேசினார். அதை தொடர்ந்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மொத்தம் 44 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது. இதில் இரண்டு தீர்மானங்கள் ஒத்தி வைக்கப்பட்டதால், மீதமுள்ள 42 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் காலை உணவு தயாரித்து வழங்கும் பணியை தனியாருக்கு கொடுக்கவும், 358 பள்ளிகளில் படிக்கும் 65 ஆயிரம் மாணவர்களுக்கு முறையாக உணவு வழங்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்துக்கு சென்னை பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஓராண்டுக்கு காலை உணவு வழங்குவதற்கு ₹19 கோடி செலவாகிறது. இதன் மூலம் 6,530 மாணவர்கள் பயன்பெறுவார்கள். இதற்கான ஒப்பந்தம் முடிவு செய்ய துணை ஆணையர் ஷரண்யா அறி (கல்வி) தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர்கள் பணியை மேற்கொள்ள சில விதிகள் வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி குறிப்பிட்ட நேரத்தில், காலை உணவு வழங்கப்பட வேண்டும்.

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான காலை உணவு வழங்கப்பட வேண்டும். இதுகுறித்து ஒரு மாதத்திற்கான உணவு வகை பட்டியல் கல்வி துறையின் மூலம் வழங்கப்படும். இதை எந்த காரணம் கொண்டும் சென்னை மாநகராட்சியின் முன்அனுமதியின்றி மாற்றக்கூடாது. தினந்தோறும் சமைக்க வேண்டிய உணவின் மொத்த அளவை சமைப்பதற்கு முதல் நாள் சம்பந்தப்பட்ட உதவி கல்வி அலுவலரிடம் பெற்றுக் கொள்ள வேண்டும். காலை 8 மணிக்கு பள்ளியில் காலை உணவு வழங்கப்பட வேண்டும். தாமதம் ஏற்படக்கூடாது. தாமதமாக வழங்கப்படும் உணவிற்கு தொகை வழங்கப்பட மாட்டாது. மேலும், குழுவால் நிர்ணயிக்கப்படும் அபராதத் தொகையும் விதிக்கப்படும். சென்னை மாநகராட்சி சமையற்கூடங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஒரு மாணவனுக்கு நாளொன்றிற்கு வழங்கப்படும் காலை உணவுக்கான மூலப்பொள் அளவு 50 கிராம் அரிசி, ரவை, கோதுமை, சேமியா வழங்கப்பட வேண்டும். ஒரு வாரத்தில் குறைந்தது 2 நாள்உள்ளூரில் கிடைக்கும் சிறு தானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவு வழங்கப்பட வேண்டும். இஸ்லாமிய பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை விடப்படுவதாலும், சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக இருப்பதாலும் வெள்ளிக்கிழமை வழங்கப்பட வேண்டிய உணவை சனிக்கிழமை அந்த பள்ளிகளுக்கு வழங்க வேண்டும். சனிக்கிழமை வேலை நாளாக அரசு அறிவிக்கும் பட்சத்தில் புதன்கிழமை வழங்க வேண்டிய காய்கறி சாம்பாருடன் கூடிய பொங்கல் வழங்கப்பட வேண்டும். காலை உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் தரம் நெறிமுறைகளுக்கு உகந்ததாக இருக்க வேண்டும். இயல்பான நிறம், மணம் உடையதாகவும், வேறு வெளிப்பொருட்கள் கலக்காமலும் சுத்தமாக இருக்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகளை கொண்டு சமைக்கக்கூடாது என 41 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

காலை உணவு திட்டத்தை முறையாக வழங் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே, ஒப்பந்ததாரர்கள் பள்ளிகளுக்கு சரியான நேரத்திற்கு உணவு வழங்க வேண்டும். தாமதம் ஏற்பட்டால் அபராதம் விதிப்பது, தரம் குறைந்த உணவு வழங்கினால் 3 முறை அதாவது ₹1000 முதல் ₹3ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். பிறகும் தொடர்ந்தால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும். உணவு அளவு குறைதல், தரம் குறைந்த மூலப்பொருள் மற்றும் காய்கறிகளை பயன்படுத்துதல், சமையல் கூடம் சுத்தமாக பராமரிக்க தவறினால் அபராதம் விதிக்கவும் தொடர்ந்து தவறு செய்தால் ஒப்பந்தத்தை ரத்து செய்யவும் தீர்மானிக்கப்பட்டது. தரம் குறைந்த உணவு வழங்கினால் 3 முறை அதாவது ₹1000 முதல் ₹3ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

தற்காலிக ஊழியர் பணி நீட்டிப்பு
சென்னை மாநகராட்சி துப்புரவு பணியாளர்களான தற்காலிக ஊழியர்கள் 1,778 பணி நீட்டிப்பு வழங்க அனுமதி, தீவுத்திடலில் நடைபெறும் பார்முலா-4 கார் ரேஸ் நடத்துவதற்காக போக்குவரத்து மேம்பாட்டு பணிக்காக சாலையை அகழ்ந்து எடுப்பது, மறுசீரமைப்பு செய்ய தனியாருக்கு ஒப்பந்தம் வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநகராட்சி பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சியை ஏற்படுத்தும் ஆசிரியர்களை ஊக்குவிக்க தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மூலம் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களுக்கு அழைத்து செல்லப்படுவார்கள். கிறிஸ்தவர்களுக்கான, இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்காக நிர்ணயிக்கப்பட்ட 14 ஆண்டு கால இடைவெளியை திருத்தம் செய்ய அனுமதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதிய நிபந்தனைகள், விதிமுறைகளின்படி குடும்ப கல்லறைகள் மற்றும் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

The post சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் பணி தனியாரிடம் ஒப்படைப்பு:  41 கட்டுப்பாடுகள் அறிவிப்பு  தவறுகள் நடந்தால் ஒப்பந்தம் ரத்து appeared first on Dinakaran.

Tags : Chennai Municipal Meeting ,Chennai ,Chennai Municipal Council ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...