×

முதல்பரிசு பெற்ற காளை மாட்டுக்கு கத்திவெட்டு உரிமையாளர் போலீசில் புகார் ஆந்திராவில் நடந்த போட்டியில்

பேரணாம்பட்டு, அக்.31: ஆந்திராவில் நடந்த போட்டியில் முதல் பரிசு பெற்று திரும்பிய காளை மாட்டின் காலினை மர்மநபர்கள் கத்தியால் வெட்டியுள்ளனர். இதுகுறித்து மாட்டின் உரிமையாளர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
பேரணாம்பட்டு அடுத்த கோட்டைகாலனியை சேர்ந்தவர் சிவா, கூலிதொழிலாளி. இவர் பல ஆண்டுகளாக காளை மாடு வளர்த்து வருகிறார். இந்த காளையை ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் மாடு விடும் திருவிழாக்கள் மற்றும் போட்டிகளுக்கு கொண்டு சென்று பங்கேற்க செய்வது வழக்கம். இந்த காளை கடந்த சில ஆண்டுகளில் 2 முறை முதல் பரிசும், மற்ற நேரங்களில் ஏதாவது ஒரு பரிசும் தொடர்ச்சியாக பெற்று வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஆந்திராவில் நடந்த காளை விடும் விழாவுக்கு சிவா, தனது காளையை வாகனத்தில் ஏற்றிச்சென்றார். அந்த போட்டியில் முதல் பரிசாக ₹40 ஆயிரத்தை அவரது காளை தட்டிச்சென்றது. இந்நிலையில் இரவு காளையுடன் வீடு திரும்பிய சிவா தனது காளையை அங்குள்ள விவசாய நிலத்தில் உள்ள கொட்டகையில் வழக்கம்போல் கட்டி வைத்தார். இந்நிலையில் நேற்று காலை பார்த்தபோது காளை மாட்டின் ஒரு கால் வெட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனை யாரோ மர்மநபர்கள் முன்விரோதம் காரணமாக வெட்டியிருக்கலாம் எனக்கருதப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக பேரணாம்பட்டு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் எஸ்ஐ அருண்காந்தி, எஸ்எஸ்ஐ இளங்கோவன் ஆகியோர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post முதல்பரிசு பெற்ற காளை மாட்டுக்கு கத்திவெட்டு உரிமையாளர் போலீசில் புகார் ஆந்திராவில் நடந்த போட்டியில் appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Peranampatu ,
× RELATED கொளுத்தும் வெயிலுக்கு மரம்...