×

மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள், பணியாளர்களுக்கு இந்த மாதமே முழு உடல்பரிசோதனை: மேயர் பிரியா பேட்டி

சென்னை: சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்களுக்கான 2023-24ஆம் ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 437 பேருக்கு மேயர் பிரியா பரிசுகளை வழங்கினார். சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்களுக்கான 2023-24ஆம் ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டிகள் 09.10.2023 அன்று நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவால் நேரு பூங்கா விளையாட்டுத் திடலில் கொடியேற்றி தொடங்கி வைக்கப்பட்டது.

சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்களின் உடல் நலனில் அக்கறை கொண்டு 2023-24ஆம் ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கப்பட்டு, 9.10.2023 முதல் 27.10.2023 வரை கையுந்து பந்து, கால்பந்து கிரிக்கெட் , டென்னிகாய்ட் , எறிபந்து , கோ-கோ, கபடி, இறகுப் பந்து, நீச்சல் போட்டி, சதுரங்க ஆட்டம், கேரம், தடகள விளையாட்டுக்கள், கயிறு இழுத்தல், மியூசிக்கல் சேர்ஸ், லக்கி கார்னர் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.

இந்தப் போட்டிகளில் மாநகராட்சியில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களில் 1,109 ஆண்கள், 581 பெண்கள் என 1,690 நபர்களும், மாமன்ற உறுப்பினர்களில் 55 ஆண்கள், 20 பெண்கள் என 75 நபர்கள் என மொத்தமாக 1,765 நபர்கள் கலந்து கொண்டு விளையாடினர். இவற்றில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களில் 247 ஆண்கள், 169 பெண்கள் என 416 நபர்களும், மாமன்ற உறுப்பினர்களில் 9 ஆண்கள், 12 பெண்கள் என 21 நபர்கள் என மொத்தமாக 437 நபர்கள் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்களைப் பாராட்டி மேயர் பிரியா சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகளை நேற்று ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்.

நிகழ்ச்சியில் 99வது வார்டு கவுன்சிலர் பரிதி இளம் சுருதி பேசுகையில், ‘‘சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களாக பணிக்கு வந்து 1.5 ஆண்டுகள் ஆகியுள்ளது. ஆனாலும் நாங்கள் இதுவரை செல்போனில் அலாரம் வைத்து எழுந்ததே இல்லை. பொதுமக்கள் எங்களை வந்து எழுப்பி விடுகின்றனர். பணிகளில் பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் எங்களுக்கும் அதிகாரிகளுக்கும் இந்த போட்டிகள் மூலம் ரிலாக்ஸாகி உள்ளோம்.அந்த வகையில் மாநகராட்சி அதிகாரிகளுக்கு அலுவலர்களும் பணிகளுக்கு இடையே ரிலாக்ஸாக சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் விளையாட்டு அறை கட்டித் தர வேண்டும்’’, என்றார். பின்னர் பேசிய மேயர் பிரியா, ‘‘விளையாட்டு என்பது பள்ளி மாணவர்கள் தான், இந்த வயது உள்ளவர்கள் தான் விளையாட வேண்டும் என்று இல்லை.மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களும், பணியாளர்களும் இந்த ஒரு மாதமாக விளையாடியதோடு மட்டுமில்லாமல் தினமும் விளையாடுவதற்காக ஒரு மணி நேர நேரத்தை ஒதுக்கி கொள்ள வேண்டும்.இந்த ஆண்டு நடந்த போட்டிகளில் 436 அலுவலர்களும், 26 மாமன்ற உறுப்பினர்களும் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.

இது பத்தாது, அடுத்த ஆண்டும் இந்த போட்டி நடைபெறும், அதில் நிறைய மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டும். மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள், பணியாளர்களுக்கு இந்த மாதமே முழு உடல்பரிசோதனை நடத்தப்படும். சென்னை மாநகராட்சி அலுவலர், மாமன்ற உறுப்பினர்கள் பணிகளில் மட்டுமல்ல மற்றவற்றிலும் குடும்பமாக இணைந்துள்ளோம். அதேபோல அனைவரும் தினசரி ஏதாவது ஒரு விளையாட்டை கடைபிடிக்க வேண்டும்,’’ என்றார்.

* ஆலோசனை கூட்டம்

சென்னை மாநகராட்சி சார்பாக கடந்த ஆண்டு முதல் மழைநீர் வடிகால் பணிகள் தீவிரமாக நடைபெற்ற வருகிறது. சில பகுதிகளில் மட்டும் முடிக்க வேண்டி உள்ளது. இந்த பணிகளும் விரைவாக 10 நாட்களுக்குள் முடிக்கப்படும். அடிக்கடி மழை பெய்வதால் பணிகளை தொடர்ந்து செய்வதில் சுணக்கம் இருந்தது. கொசஸ்தலை ஆறு பகுதிகளில் நடைபெறும் பணிகளை ஜனவரி பிப்ரவரி மாதங்களுக்குள் முடிக்க உத்தரவிட்டோம். தெருக்களில் திரியும் மாடுகளை பிடித்து வைக்க தனி இடம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. உரிமையாளர்கள் தொடர்ந்து மாடுகளை தெருவில் திரியவிட்டால் மாடுகளை அந்த இடத்தில் வந்து பார்த்துக் கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். தெருக்களில் திரியும் மாடுகளை பிடிக்க செல்லும் அலுவலர்களுக்கு மிரட்டல் விடுக்கப்படுவதால், அலுவலர்களோடு காவல்துறையினரும் ஒத்துழைக்க காவல்துறையோடு கூட்டு ஆலோசனைக்கூட்டம் நடத்தப்படும். மாநகராட்சி அலுவலர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி அலுவலகத்திலேயே உள் விளையாட்டு அரங்கு கோரியுள்ளனர். அதுகுறித்து பரிசீலிக்கப்படும், என மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

 

The post மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள், பணியாளர்களுக்கு இந்த மாதமே முழு உடல்பரிசோதனை: மேயர் பிரியா பேட்டி appeared first on Dinakaran.

Tags : Mayor ,Priya ,Chennai ,Chennai Corporation ,
× RELATED சென்னை மாநகராட்சி மேயர் பிரியா சென்ற கார் விபத்தில் சிக்கியது