×

துபாயிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி கொண்டுவரப்பட்ட ரூ.1.3 கோடி மதிப்புடைய 2 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்: விமான நிலைய ஊழியர் கைது தப்பிய கடத்தல் ஆசாமிகள் அதிகாரிகள் விசாரணை

 

சென்னை: துபாயிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திக் கொண்டுவரப்பட்ட ரூ.1.3 கோடி மதிப்புடைய 2 கிலோ தங்க கட்டிகளை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்கு உதவிய விமான நிலைய ஒப்பந்த ஊழியரை கைது செய்தனர். துபாயிலிருந்து சென்னைக்கு சர்வதேச விமான நிலையத்திற்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று காலை வந்தது. அதில் வந்த பயணிகளை, விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சென்னை விமான நிலையத்தில் தற்காலிக ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் அருள் பிரபாகர் (32) என்பவர் அவசரம் அவசரமாக விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்ல முயன்றார். இதனால் சந்தேகமடைந்த சுங்கத்துறை அதிகாரிகள், அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது அருள் பிரபாகர் தனக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பெர்மிஷன் போட்டுவிட்டு, வீட்டிற்கு செல்கிறேன் என்று கூறினார். அதோடு அவர் மிகுந்த பதட்டத்துடன் காணப்பட்டார். இதனால் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு அவர் மீது சந்தேகம் மேலும் வலுத்தது.

இதையடுத்து அருள் பிரபாகரை வெளியில் விடாமல் சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை முழுமையாக பரிசோதித்த போது, அவருடைய உள்ளாடைக்குள் பார்சல் ஒன்று இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அந்த பார்சலை பிரித்து பார்த்தபோது, அதனுள் தங்க கட்டிகள் இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில், துபாயில் இருந்து வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், இலங்கையைச் சேர்ந்த ஒரு பயணி ஒருவர் இந்த தங்க கட்டி பார்சலை கடத்தி வந்துள்ளார். அப்போது அருள் பிரபாகர், பயணிகள் விமானத்தில் இருந்து இறங்கி வரும் வழியில் நின்று இலங்கை ஆசாமி கொண்டு வந்திருந்த பார்சலை வாங்கி தனது உள்ளாடைக்குள் மறைத்து வைத்துக் கொண்டார்.

அந்த கடத்தல் பயணி, சென்னை வழியாக இலங்கை செல்லும் டிரான்சிட் பயணி என்பதனால், அருள் பிரபாகர் அந்த பயணியை அழைத்துச் சென்று, இலங்கை செல்லும் விமானத்தில் ஏற்றி அனுப்பிவிட்டு வெளியில் வரும்போது சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கிக் கொண்டார் என தெரிய வந்தது. மேலும் இந்த தங்க கட்டிகளை, விமான நிலையத்திற்கு வெளியே திரிசூலம் ரயில் நிலையத்தில் நின்ற ஒருவரிடம் கொடுக்க எடுத்துச் சென்றார் என்றும் தெரிந்தது. தொடர்ந்து சுங்க அதிகாரிகள் அருள் பிரபாகரை அழைத்துக்கொண்டு, திரிசூலம் ரயில் நிலையத்திற்கு சென்றனர். ஆனால் அருள் பிரபாகர் சுங்கதுறையிடம் சிக்கிவிட்டார் என்ற தகவல் கிடைத்து, அந்த ஆசாமி மாயமாகிவிட்டான்.

அதேபோல் துபாயில் இருந்து தங்க கட்டிகளை கடத்தி வந்த இலங்கையை சேர்ந்த கடத்தல் ஆசாமியும், இலங்கைக்கு விமானத்தில் தப்பி சென்று விட்டார். இதையடுத்து சுங்க அதிகாரிகள் அருள் பிரபாகரை மட்டும் கைது செய்து, தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். அவர் வைத்திருந்த பார்சலில் 2 கிலோ தங்கம் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.1.3 கோடி ஆகும். மேலும் சுங்க அதிகாரிகள் அருள் பிரபாகரிடம் மேலும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்திக் கொண்டு வரப்படுவதும், கடத்தல் ஆசாமிகளுக்கு விமான நிலைய ஒப்பந்த ஊழியர்கள் துணை போவதும், தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

The post துபாயிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி கொண்டுவரப்பட்ட ரூ.1.3 கோடி மதிப்புடைய 2 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்: விமான நிலைய ஊழியர் கைது தப்பிய கடத்தல் ஆசாமிகள் அதிகாரிகள் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Dubai ,Chennai ,Dinakaran ,
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...