×

இஎஸ்ஐ மருத்துவமனை நுழைவு வாயிலில் பாம்புகள் நடமாட்டம் உள்ளதாக நோட்டீஸ்: நோயாளிகள் அச்சம், நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மதுராந்தகம்: இஎஸ்ஐ மருத்துவமனை நுழைவு வாயிலின் முன்பாக பாம்புகள் நடமாட்டம் அதிகம் உள்ளது கவனம் தேவை என பேப்பரில் எழுதி ஒட்டப்பட்டுள்ளது. இதனால், மருத்துமனைக்கு வரும் நோயாளிகள் கடும் அச்சத்தில் உள்ளனர். மேலும், இப்பகுதியில் உள்ள செடி, கொடிகளை அப்புறப்படுத்தி சுத்தமாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகரம் தேரடி தெருவில், நூலகம் அருகே இஎஸ்ஐ மருந்தகம் என அழைக்கப்படும் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகம் செயல்பட்டு வருகிறது.

இந்த மருத்துவமனையை மதுராந்தகம் மட்டுமல்லாமல் அதை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான, தொழிலாளர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த வளாகம் அருகே பெரும்பாலும் புதர் மண்டிய நிலையிலேயே காணப்படுகிறது. இதனை தொடர்ந்து, இந்த மருத்துவமனைக்கு வருபவர்கள் விஷப்பூச்சிகளுக்கு அஞ்சியவாறு இந்த மருத்துவமனைக்கு வந்து செல்வது வழக்கம் என கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக அந்த மருத்துவமனையின் நுழைவாயில் அருகே அறிவிப்பு ஒன்று ஒட்டப்பட்டுள்ளது.

அதில், இப்பகுதியில் பாம்புகள் நடமாட்டம் உள்ளதால் இங்கு வருபவர்கள் கவனமாக வர வேண்டும் என அச்சடிக்கப்பட்ட நோட்டீஸ் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது. இதனை அங்கு வருபவர்கள் வித்தியாசமாக பார்த்து செல்கின்றனர். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்லும் இங்கே செடி, கொடிகளை அகற்றி சுத்தமாக வைத்துக் கொள்ளாமல் இது போன்ற அறிவிப்பை, இந்த மருத்துவமனை நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் நேரில் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

The post இஎஸ்ஐ மருத்துவமனை நுழைவு வாயிலில் பாம்புகள் நடமாட்டம் உள்ளதாக நோட்டீஸ்: நோயாளிகள் அச்சம், நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : ESI ,Madhurantagam ,ESI Hospital ,Dinakaran ,
× RELATED வாரிசு சான்றிதழ் பெற மே 12க்குள் விண்ணப்பிக்கலாம்: இஎஸ்ஐ தகவல்