×

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வீடுவீடாக சென்று குடிநீர் தர பரிசோதனை: குடிநீர் வாரியம் நடவடிக்கை

பெரம்பூர்: வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கொளத்தூரில் வீடுவீடாக சென்று குடிநீர்வாரிய அதிகாரிகள் தரப் பரிசோதனை செய்கின்றனர். இதில் ஏதேனும் பிரச்னை இருந்தால் புகார் தெரிவிக்கலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதில் சென்னையில் அவ்வப்போது விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. பொதுவாக பருவமழை காலங்களில் குடிநீரினால் ஏற்படும் நோய்களை களைய குடிநீர் வாரியம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் குடிநீரை சுத்திகரித்து ஒவ்வொரு வீட்டுக்கும் வழங்கி வருகின்றனர். அந்த தண்ணீர் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருப்பதை அவ்வப்போது குடிநீர் வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர். இதில் குறிப்பிட்ட இடங்களில் வழங்கப்படும் குடிநீரின் மாதிரிகளை எடுத்து ஆய்வகங்களுக்கு அனுப்பி, அதன் தரப் பரிசோதனையை ஆய்வு செய்து அதில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின், அதனை சீரமைத்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட 64வது வார்டில் இருந்து 70 வது வார்டு வரை நேற்று குடிநீர் வாரிய மேற்பார்வை பொறியாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவின் பேரில், திருவிக நகர் பகுதி பொறியாளர் பாக்கியலட்சுமி, துணை பகுதி பொறியாளர் சுரேஷ்குமார் மேற்பார்வையில் குடிநீர் வாரிய ஊழியர்கள் ஒவ்வொரு வார்டுக்கும் உட்பட்ட 30 இடங்களில், வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீரைப் பிடித்து அதனை ஆய்வுக்கு உட்படுத்தினர். பொதுமக்களிடம் வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீரில் ஏதாவது பிரச்னை உள்ளதா, அல்லது கழிவுநீர் கலந்து வருகிறதா உள்ளிட்ட பல்வேறு விவரங்களையும் அவர்கள் சேகரித்தனர். மேலும் பல்வேறு இடங்களில் எடுக்கப்பட்ட குடிநீர் மாதிரிகளை குடிநீர் வாரிய அலுவலகத்திற்கு கொண்டு சென்று அதனை ஆய்வுகளுக்கு உட்படுத்தினர்.

இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘மழைக்காலம் தொடங்கி உள்ளதால் குடிநீரை காய்ச்சி, வடிகட்டி குடிக்க வேண்டும் என பொதுமக்களிடம் அறிவுறுத்தி வருகிறோம். மேலும் பல்வேறு இடங்களில் குடிநீர் மாதிரிகளை சேகரிக்கிறோம். அதனை முறையாக ஆய்வு செய்து அதில் நுண்கிருமிகளோ அல்லது கழிவுநீரோ கலந்துள்ளதா என ஆய்வு செய்கிறோம். குடிநீரில் பிரச்சினை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக அந்த இடங்களில் பொதுமக்களுக்கு தரமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். மழைக்காலம் முடியும் வரை பல்வேறு இடங்களில் சுழற்சி முறையில் இந்த குடிநீர் தர பரிசோதனை நடத்தப்படும். மேலும் பொதுமக்களும் தங்களுக்கு வழங்கப்படும் குடிநீரில் ஏதாவது பிரச்னை இருந்தால் சம்பந்தப்பட்ட குடிநீர் வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்,’’ என்றார்.

The post வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வீடுவீடாக சென்று குடிநீர் தர பரிசோதனை: குடிநீர் வாரியம் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : North East Monsoon ,Water Board ,Perambur ,Kolathur ,Dinakaran ,
× RELATED கடந்த 32 மாத திமுக ஆட்சியில்...