×

பசும்பொன் வந்த எடப்பாடிக்கு எதிராக கோஷம்

ராமநாதபுரம்: பசும்பொன்னிற்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை நேற்று நடைபெற்றது. இதில், பங்கேற்பதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை மதுரை வந்தார். மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மருதுபாண்டியர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, விஜயபாஸ்கர், உதயகுமார் மற்றும் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவாலயத்திற்கு எடப்பாடி வேனில் சென்றார். வழக்கமாக இதுபோன்ற நிகழ்வுகளுக்கு எடப்பாடி காரில் செல்வது வழக்கம். ஆனால், தேவர் நினைவாலயத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்துவதற்கு முக்குலத்தோர் சமுதாய மக்கள் மத்தியில் கடந்த சில நாட்களாகவே கடும் எதிர்ப்பு இருந்தது. இதனை கருத்தில் கொண்டு நேற்று அவர் வழக்கமான காரை தவிர்த்து பத்துக்கும் மேற்பட்ட பவுன்சர்கள் புடை சூழ வேனில் பசும்பொன் வந்தார். அவரது ஆதரவாளர்கள் பின்னால் கார்களில் சென்றனர். அப்போது அபிராமம் கிராமம் அருகே, 8 பேர் கொண்ட கும்பல், திடீரென ‘எடப்பாடி ஒழிக’ என கோஷமிட்டு அவரது வேனை மறிக்க முயன்றனர். அவர்களை, போலீசார் தடுத்து நிறுத்தி அழைத்துச் சென்றனர். எடப்பாடி வந்த வேனை பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து பசும்பொன் நினைவாலயத்தில் உள்ள தேவர் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது நினைவாலயத்தில் சுற்றியிருந்த பலர், ‘துரோகி எடப்பாடி பழனிசாமியே ஒழிக, சசிகலாவுக்கு துரோகம் செய்த பழனிசாமியே ஒழிக, இட ஒதுக்கீட்டில் முக்குலத்தோருக்கு துரோகம் செய்த பழனிசாமியே ஒழிக…’ என மாறி, மாறி கோஷமிட்டபடி அவரை முற்றுகையிட முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே எடப்பாடியுடன் இருந்த முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், உதயக்குமார் ஆகியோர் கோஷமிட்டவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார், கோஷமிட்டவர்களை அழைத்துச் சென்று நினைவிட கேட்டை பூட்டினர். தேவர் நினைவிடத்தில் எடப்பாடிக்கு எதிராக நடந்த போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post பசும்பொன் வந்த எடப்பாடிக்கு எதிராக கோஷம் appeared first on Dinakaran.

Tags : Pasumbon ,Vanda Edappadi ,Ramanathapuram ,Edappadi Palaniswami ,Pasumpon ,Ramanathapuram District ,Kamudi ,Edappadi ,Dinakaran ,
× RELATED ராமநாதபுரம் மாவட்டத்தில் உப்பு உற்பத்திக்கு தயாராகும் உப்பளங்கள்