×

தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி, இம்மானுவேல் சேகரன் குரு பூஜைக்கு சிறப்பான பாதுகாப்பு: திட்டமிட்டு செயல்பட்டதால் அசம்பாவிதம், விபத்துகள் ஏற்படாமல் தவிர்ப்பு; தனிப்படைக்கு டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டு

சென்னை: முத்துராலிங்க தேவர் ஜெயந்தி, இம்மானுவேல் சேகரன் குரு பூஜை ஆகிய இரு நிகழ்ச்சிகளிலும் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் திட்டமிட்டு செயல்பட்ட போலீசார் மற்றும் சட்டம் -ஒழுங்கு ஏடிஜிபி தலைமையிலான தனிப்படையினருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டு தெரிவித்துள்ளார். அக்டோபர் 30ம் தேதி முத்துராமலிங்க தேவர் பிறந்த நாள் விழா மற்றும் செப்டம்பர் 11ம் தேதி இம்மானுவேல் சேகரனாருக்கான குரு பூஜை நிகழ்ச்சியை போலீசார் முக்கியமாக கருதுவார்கள். தென் மாவட்டங்களில் அதிகமாக உள்ள இரு சமூகத்தினர் நடத்தும் நிகழ்ச்சிகள் என்பதால், தென் மாவட்டங்களில் இந்த இரு நிகழ்ச்சிகள் எப்போது நடந்தாலும் மக்கள் ஒருவித அச்சத்துடனேயே இருப்பார்கள்.

இரு நிகழ்ச்சிகளையும் சுமுகமாகவும், சமூக நல்லிணக்கமாகவும் நடத்த ஏற்பாடு செய்யும்படி போலீஸ் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் சிறப்பு செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உத்தரவிட்டிருந்தனர். இதனால் இரு நிகழ்ச்சிகள் குறித்து உள்துறைச் செயலாளர் அமுதா, டிஜிபி சங்கர் ஜிவால் ஆகியோர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அதை தொடர்ந்து சட்டம்- ஒழுங்கு ஏடிஜிபி அருண் தலைமையில் தென் மண்டல ஐஜி நரேந்திரன் நாயர், 4 டிஐஜிக்கள், 24 எஸ்பிக்கள் தலைமையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இரு நிகழ்ச்சிகளுக்கும் 3 மாதத்துக்கு முன்னரே திட்டமிடப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

3 நாட்களுக்கு முன்னர் ஏடிஜிபி அருண், நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளுக்குச் சென்று முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்தார். அதில் 4 முக்கிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. முதலாவதாக, நிகழ்ச்சிகளுக்கு செல்லும் வாகனங்கள் உள்ளூர் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டன. வாகன உரிமையாளர், டிரைவர் பெயர் மற்றும் செல்போன் எண்கள் வாங்கப்பட்டன. தவறுகள் நடந்தால், வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டது. வாகனங்கள் ஒவ்வொரு மாவட்டத்தைக் கடக்கும்போதும் அந்த வாகன எண் மற்றும் டிரைவரின் பெயர், செல்போன் எண்ணை சரிபார்த்து அனுப்பி வைத்தனர். இதனால் அசம்பாவித சம்பவங்களை யாராவது திட்டமிட்டால் டிரைவரே பயந்து தடுத்து விடுவார் என்பதற்காக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இரண்டாவதாக, இரு நிகழச்சிகளுக்கும் வாகனங்கள் செல்லும் பாதைகள் 3 மாதத்திற்கு முன்பே திட்டமிடப்பட்டு, அங்கு உயர் அதிகாரிகள் கண்காணிக்க தொடங்கினர். சாலை ஓரமாக உள்ள கிராம பெரியவர்கள், நாட்டாமைகள் பெயர்கள் பெறப்பட்டு அவர்களிடம் எந்தவித தகராறும் செய்ய மாட்டோம் என்று எழுதி வாங்கப்பட்டன. கிராமங்களுக்கு உள்ளூர் ரோந்து வாகனங்கள் மட்டுமின்றி மேற்கு மண்டலம், வடக்கு மண்டலத்தில் இருந்தும் வரவழைக்கப்பட்டன. ரோந்து வாகனத்தில் வெளி மாவட்ட போலீசாரே ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதால், வெளியூரில் இருந்து போலீசார் அதிகமாக குவிக்கப்பட்டது உள்ளூர் மக்களுக்கு தெரியவந்தது. இரு சமூக மக்களிடம் நல்லுறவை ஏற்படுத்தவும் போலீசார் முடிவு செய்து, மாற்று சமூகத்தினர் வரவேற்று, உபசரிக்கவும் ஏற்பாடுகளை செய்தனர்.

மூன்றாவதாக, இரு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் பிரச்னை செய்து விட்டு சந்து, பொந்துகளில் தப்பிச் செல்லும் திட்டம் தவிர்க்கப்பட்டது. நேற்று நிகழ்ச்சி முடிந்த பிறகே வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டன. நான்காவதாக, தலைவர்களுக்காக சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதனால் இரு நிகழ்ச்சிகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தாலும், போலீசாரின் திட்டமிடலாலும், சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளாலும் அடுத்த சமூகத்தினர் புண்படும் படியான கோஷங்கள் கூட போடப்படவில்லை. இது ஒரு சமுதாய நல்லிணக்கத்துக்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது. அதிமுக பிரிவுக்குப் பிறகு முதன்முறையாக எடப்பாடி பழனிசாமி, பசும்பொன் வந்தார். இதனால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போலீசார் திட்டமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்ததால், எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை.

போலீசாரின் திட்டமிட்ட செயலால் அசம்பாவித சம்பவங்கள் மட்டுமல்லாமல், மாவட்டங்களில் சிறு விபத்து கூட ஏற்படவில்லை. வாகனங்கங்கள் புறப்பட்டது முதல் டிரைவர்களை போலீசார் கண்காணிக்க தொடங்கினர். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை டிரைவர்களிடம் அதிகாரிகள் பேசினர். மாவட்ட எல்லைகளிலும் கண்காணிப்பு செய்யப்பட்டன. இதனால் டிரைவர்கள் பல மடங்கு ஜாக்கிரதையுடன் வாகனங்களை ஓட்டினர். இரு நிகழ்ச்சிகளும் அமைதியாக நடந்ததால், தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால், நேற்று இரவு சட்டம்- ஒழுங்கு ஏடிஜிபி அருண் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்த அதிகாரிகளை போலீஸ் மைக்கில் பாராட்டினார்.

The post தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி, இம்மானுவேல் சேகரன் குரு பூஜைக்கு சிறப்பான பாதுகாப்பு: திட்டமிட்டு செயல்பட்டதால் அசம்பாவிதம், விபத்துகள் ஏற்படாமல் தவிர்ப்பு; தனிப்படைக்கு டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Muthuramalinga Devar Jayanti ,Emmanuel Shekaran Guru Puja ,Tamil Nadu ,DGP ,Shankar Jiwal ,Chennai ,Muthuralinga Devar Jayanti ,Emmanuel Shekaran Guru Pujai ,Dinakaran ,
× RELATED மணல் குவாரி விவகாரம் அமலாக்கத்துறை...