×

திருத்தணி நெமிலியில் ஏரிக்கரை தடுப்பு வேலிகள் திருட்டு: விபத்து ஏற்படும் அபாயம்

திருத்தணி: திருத்தணி நாகலாபுரம் சாலையில் வேலஞ்சேரி, தாழவேடு காலனி, நெமிலி, என்.என். கண்டிகை, சிவாடா வழியாக நாகலாபுரம், காலஸ்திரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதே போன்று இந்த வழியாக கார், பைக் போன்ற வாகனங்களும் ஏராளமாக சென்று வருகிறது. இந்த சாலையில் நெமிலி ஏரிக்கரை உள்ளது. இந்த ஏரிக்கரை மீது உள்ள சாலையின் இரண்டு பக்கங்களிலும் விபத்து ஏற்படாத வகையில் இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரும்பு வேலிகளின் சில துண்டுகளை அப்பகுதியை சேர்ந்த சில விஷமிகள் அதை திருடி சென்று விட்டனர். மேலும் திருடுவதற்காக போல்ட் நட்டுகளை கழற்றி விட்டுள்ளனர். அவை உடல்களை பதம் பார்க்கும் நிலையில் சாலையோரம் நீட்டிக்கொண்டு இருக்கின்றன. இதன் காரணமாக வேகமாக வரும் வாகனங்கள் தவறி ஏரிக்குள் விழுந்து விபத்து ஏற்படும் சூழலும் உடலை குத்திக் கிழிக்கும் அபாயமும் உள்ளது. மேலும் ஏரி 30 அடிக்கும் மேல் ஆழமாக இருப்பதால் ஏதாவது விபத்து நேரிட்டால் உயிர் சேதம் ஏற்படும் என்று பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.

மேலும் இந்த சாலையின் ஓரங்களில் இதே போன்று நெடுஞ்சாலை மற்றும் ஊரக வளர்ச்சி சாலைகள் கிராமப்புற சாலைகள் பல பகுதிகளில் முட்பதர்களும் புதர்களும் மண்டி உள்ளன. இதனால் இரவு நேரத்தில் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்கள் வெளிச்சத்தில் நிலை தடுமாறி புதர்களில் விழுந்து பலரும் காயம்பட்டு வருகின்றனர். எனவே அனைத்து சாலைகளிலும் உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் சாலை ஓரத்தில் உள்ள புதர்களை அகற்ற ஒரு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post திருத்தணி நெமிலியில் ஏரிக்கரை தடுப்பு வேலிகள் திருட்டு: விபத்து ஏற்படும் அபாயம் appeared first on Dinakaran.

Tags : Tiruthani Nemili ,Thiruthani ,Nagalapuram Road Velanchery ,Thalavedu Colony ,Nemili ,N.N. Nagalapuram ,Kalastri ,Kandigai ,Sivata ,
× RELATED தேர்தல் பணிக்கு வந்த துணை ராணுவ படையினருக்கு திருத்தணி போலீசார் விருந்து