×

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பாலிதீன் பேக் தொழிற்சாலையில் தீ விபத்து: கெமிக்கல் பேரல்கள் வெடித்து சிதறின ரூ.14 கோடி மதிப்புள்ள பொருட்கள் நாசம்

அம்பத்தூர்: அம்பத்தூர் தொழிற்பேட்டையில் நேற்று நள்ளிரவு ஒரு தனியார் பிளாஸ்டிக், பாலிதீன் பேக் தொழிற்சாலையில் திடீரென தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் அங்கிருந்து கெமிக்கல் பேரல்கள் வெடித்து சிதறியதால், அங்கு உற்பத்தி செய்யப்பட்டு, ஏற்றுமதிக்குத் தயார்நிலையில் இருந்த பிளாஸ்டிக், பாலிதீன் பேக்குகள், இயந்திரங்கள் உள்பட ரூ.14 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகிவிட்டன. பின்னர் 5 மணி நேரத்துக்கு மேல் போராடி ஸ்கைலிப்ட் தீயணைப்பு வாகனத்தின் மூலம் வீரர்கள் தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகே காமாட்சி பாலிபேக் எனும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு 3 ஷிப்ட்டுகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைபார்த்து வருகின்றனர். இத்தொழிற்சாலையில் பல்வேறு வகையான பிளாஸ்டிக், பாலிதீன் உள்பட ஏராளமான பேக்கிங் பொருட்கள் நவீன இயந்திரங்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த தனியார் பேக்கிங் தொழிற்சாலையில் நேற்றிரவு 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலைபார்த்து கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு 1.30 மணியளவில் தொழிற்சாலையின் ஒரு பகுதியில் திடீரென கரும்புகை எழுந்து, சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரியத் துவங்கியது. மேலும், அங்கிருந்த 10க்கும் மேற்பட்ட கெமிக்கல் பேரல்கள் வெடித்து சிதறின. இதனால் பேக்கிங் தொழிற்சாலை முழுவதும் மளமளவென தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தது. இதை பார்த்ததும் அங்கு வேலை பார்த்த ஊழியர்கள் அலறியடித்தபடி வெளியே ஓடிவந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் அம்பத்தூர் தொழிற்பேட்டை, செங்குன்றம், தண்டையார்பேட்டை, ஜே.ஜே.நகர், ஆவடி, மாதவரம், வில்லிவாக்கம், எழும்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்களுடன் 50க்கும் மேற்பட்ட வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் தொழிற்சாலை முழுவதும் பரவிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், அங்கு ஸ்கைலிப்ட் எனும் நவீன தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்றன. எனினும், தீயணைப்பு வீரர்கள் சுமார் 5 மணி நேரத்துக்குமேல் போராடி, தொழிற்சாலை முழுவதும் பரவியிருந்த தீயை இன்று காலை 6 மணியளவில் முற்றிலுமாக அணைத்தனர்.

இவ்விபத்தில், அங்கு ஏற்றுமதிக்கு தயார்நிலையில் இருந்த பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பேக்குகள், நவீன இயந்திரங்கள் மற்றும் மூலப்பொருட்கள் உள்பட மொத்தம் ரூ.14 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகிவிட்டதாக
கூறப்படுகிறது. மேலும், இத்தொழிற்சாலை அருகே அதிநவீன மின்சாரம் செல்லக்கூடிய உயர் மின்கோபுரம் இருப்பதால், அங்கு பாதுகாப்புக்காக சுமார் 6 மணி நேரத்துக்குமேல் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இத்தொழிற்சாலையில் தீயணைப்பு பணிகளை அத்துறையின் கூடுதல் இயக்குனர் பிரியா நேரில் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினார்.

மேலும், அத்தொழிற்சாலையில் தீ தடுப்பு உள்பட பல்வேறு பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் வழிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டதா என விரிவான ஆய்வுகள் நடத்தப்படும் என கூடுதல் இயக்குநர் பிரியா தெரிவித்தார்.
இதுகுறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொழிற்சாலையில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்ததா அல்லது வேறு ஏதேனும் நாசவேலை காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். மேலும், அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகளையும் ஆய்வு செய்து விசாரிக்கின்றனர். அங்கு போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்விபத்தினால் அப்பகுதியில் இன்று காலை வரை அனைத்து தரப்பு மக்களிடையே பரபரப்பு நிலவியது.

The post அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பாலிதீன் பேக் தொழிற்சாலையில் தீ விபத்து: கெமிக்கல் பேரல்கள் வெடித்து சிதறின ரூ.14 கோடி மதிப்புள்ள பொருட்கள் நாசம் appeared first on Dinakaran.

Tags : Polythene Bag ,Ambattur ,Ambatore ,Polyethylene Bag Factory ,Dinakaran ,
× RELATED அம்பத்தூர் சிடிஎச் சாலையில்...