×

மக்களின் உரிமைகளுக்காகவும், நாட்டின் விடுதலைக்காகவும் போராடிய தேவர் பெருமகனாரின் குருபூசை நாளில் அவரை போற்றுவோம்: ராமதாஸ்!

சென்னை: மக்களின் உரிமைகளுக்காகவும், நாட்டின் விடுதலைக்காகவும் போராடிய தேவர் பெருமகனாரின் குருபூசை நாளில் அவரை போற்றுவோம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள X தள பதிவில்; தமிழ்நாட்டில் அனைத்துத் தரப்பு மக்களாலும், அனைத்து அரசியல் கட்சிகளாலும் போற்றப்படும், வணங்கப்படும் பசும்பொன் தேவர் பெருமகனார் அவர்களின் 116-வது பிறந்தநாளும், 61-வது குருபூசையும் இன்று கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில் அவரை அனைவரும் போற்றி வணங்குவோம். மக்களுக்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்ட அவரது அணுகுமுறையை அனைவரும் கடைபிடிப்போம். இந்திய விடுதலைக்காக காங்கிரசின் அங்கமாகவும், நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் சீடராகவும் இருந்து அவர் நடத்திய போராட்டங்கள் வியக்கத்தக்கவை. ஒரு சமூகத்தையே அதன் பிறப்பால் குற்றவாளிகளாக முத்திரைக் குத்தி களங்கப்படுத்தும் குற்றப்பரம்பரை சட்டத்திற்கு எதிராக ஆங்கிலேயர் ஆட்சியிலும், விடுதலை இந்தியாவிலும் போராடி அவர் பெற்ற வெற்றி ஈடு இணையற்றது.

தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளை நிலைநிறுத்த நடத்தப்பட்ட ஆலய நுழைவுப் போராட்டத்திற்கு துணை நின்றது, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தமது நிலங்களை வழங்கியது, தொழிற்சங்க தலைவராக இருந்து தொழிலாளர்களுக்கு உரிமைகளை வென்றெடுத்துக் கொடுத்தது என மக்களுக்காக அவர் நடத்திய போராட்டங்களும், பெற்ற வெற்றிகளும் ஏராளம். அனைத்துத் தரப்பு மக்களுக்காக அவர் ஆற்றிய பணிகளை இந்த நாளில் மட்டுமின்றி, எந்த நாளும் நினைவு கூர்வோம்; போற்றுவோம் என்று பதிவிட்டுள்ளார்.

 

The post மக்களின் உரிமைகளுக்காகவும், நாட்டின் விடுதலைக்காகவும் போராடிய தேவர் பெருமகனாரின் குருபூசை நாளில் அவரை போற்றுவோம்: ராமதாஸ்! appeared first on Dinakaran.

Tags : Devar Perumakhanar ,Kurupoosa day ,Ramadas ,CHENNAI ,Devar Perumakanar ,Kurupoosai day ,Bamaka ,Dinakaran ,
× RELATED பெரியார் பல்கலையில் சமூக நீதி...