×

வனவிலங்குகளை வேட்டையாட வைத்த மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் பலி: 3 பேர் கைது

அம்பை: மணிமுத்தாறு அருகே வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக சட்டவிரோதமாக வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் நள்ளிரவில் பரிதாபமாக இறந்தனர். இதுதொடர்பாக மூவரை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருகே அயன்சிங்கம்பட்டியைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து (55). இவரது மனைவி தங்கமணி (50). இவர்களுக்கு பேரின்பராஜ் (எ) வனராஜ் (28), சரவணன் (24) என இரு மகன்கள். பேச்சிமுத்துவுக்கு சொந்தமான வயல், மணிமுத்தாறு காவலர்கள் குடியிருப்பு பின்பக்கம் முனீஸ்வரன் கோயில் அருகே 40 அடி கால்வாயோரம் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் பேச்சிமுத்துவும், மகன் பேரின்பராஜ் (எ) வனராஜூம் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றனர். அப்போது வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக மின்கம்பத்தில் இருந்து சட்டவிரோதமாக மர்மநபர்கள் அமைத்திருந்த மின்வேலியை எதிர்பாராதவிதமாக மிதித்த இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் கால்வாயில் தூக்கி வீசப்பட்ட இருவரும் பரிதாபமாக இறந்தனர். தகவலறிந்து வந்த மணிமுத்தாறு போலீசார், அம்பை தீயணைப்பு நிலைய வீரர்கள் துணையுடன் இருவரது உடல்களையும் மீட்டனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த மதிவாணன் (35), பெரியசாமி (32), பாலசுப்பிரமணியன் (40) ஆகிய 3 பேரும் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து மின் திருட்டு மற்றும் மரணம் விளைவிக்கும் குற்றம் புரிதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து மூவரையும் போலீசார் கைது செய்தனர். தலா ரூ.1 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், மின்வேலியில் சிக்கி பலியான பேச்சிமுத்து மற்றும் பேரின்ப ராஜா ஆகியோரின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என கூறப்பட்டுள்ளது.

The post வனவிலங்குகளை வேட்டையாட வைத்த மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் பலி: 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : AMBAI ,Manimutthar ,Dinakaran ,
× RELATED அம்பையில் போதையில் ரகளை செய்தவர்கள் மீது வழக்கு