×

முதல்வர் மாற்றம் குறித்து எம்எல்ஏ சர்ச்சை முதல்வர் சித்தராமையா ஆதரவாளர்கள் ரகசிய கூட்டம்: துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பிரிவினர் அதிர்ச்சி

பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் நிலையில், இரண்டரை ஆண்டுக்கு பின் டி.கே.சிவகுமார் முதல்வர் ஆவார் என்று அக்கட்சி எம்.எல்.ஏ ரவிகுமார் கூறியது மற்றும் அமைச்சர் பரமேஸ்வர் வீட்டில் நடந்த ரகசிய கூட்டம் ஆகியவை கர்நாடக காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்ததில் இருந்தே அக்கட்சி அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களின் பேச்சுகள் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. சித்தராமையா ஆதரவு எம்.எல்.ஏக்கள், டி.கே.சிவகுமார் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர் பதவி கிடைக்காத விரக்தியில் உள்ள உறுப்பினர்கள் என பலரும் சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி பரபரப்பை கிளப்பி வருகின்றனர். சட்டப்பேரவை தேர்தலில் 135 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்தது. சித்தராமையா – டி.கே.சிவகுமார் இடையே முதல்வர் பதவிக்கு கடும் போட்டி நிலவியது.

டி.கே.சிவகுமாருக்கு துணை முதல்வர் பதவியை வழங்கி அவரை சமாதானப்படுத்திய கட்சி மேலிடம், சித்தராமையாவை முதல்வராக்கியது. ஆனால், இரண்டரை ஆண்டுக்கு பின் முதல்வராக்குவதாக உறுதியளித்து தான் கட்சி மேலிடம் டி.கே.சிவகுமாரை சமரசம் செய்ததாக பேசப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏவும், துணை முதல்வர் ஆதரவாளருமான ரவிகுமார், இரண்டரை ஆண்டுக்கு பின் டி.கே.சிவகுமார் முதல்வர் ஆவார் என்று பேசியிருந்தார். இனியும் கட்சி மற்றும் ஆட்சி உள்விவகாரங்கள் குறித்து எந்த எம்எல்ஏயாவது பேசினால் நோட்டீஸ் அனுப்பப்படும் என்று எச்சரித்தார். எம்.எல்.ஏ ரவிகுமாரின் பேச்சு சித்தராமையா மற்றும் அவரது ஆதரவு அமைச்சர்களை அமைதியிழக்க செய்தது. அதன்விளைவாக கடந்த வெள்ளிக்கிழமை இரவு, மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் வீட்டில் இரவு விருந்து என்ற பெயரில் ஒரு ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது.

இந்த கூட்டம் தொடர்பாக பேசிய அமைச்சர் மகாதேவப்பா, இரண்டரை ஆண்டுக்கு பின் முதல்வர் மாற்றம் என்பதெல்லாம் மூளையற்ற கருத்து. சித்தராமையா தான் 5 ஆண்டுகளும் முதல்வராக இருப்பார். முதல்வர் பதவிக்கு இப்போதைக்கு காலியிடம் இல்லை’ என்றார். முதல்வர் சித்தராமையா கூறுகையில், கூட்டத்தில் அரசியல் எதுவும் பேசப்படவில்லை. பொதுவான விஷயங்களே பேசப்பட்டதே தவிர, வேறொன்றுமில்லை. எம்எல்ஏக்கள் முதல்வரை மாற்ற முடியாது. கட்சி தலைமை தான் அதை முடிவு செய்யும்’ என்றார்.

The post முதல்வர் மாற்றம் குறித்து எம்எல்ஏ சர்ச்சை முதல்வர் சித்தராமையா ஆதரவாளர்கள் ரகசிய கூட்டம்: துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பிரிவினர் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : MLA ,Chief Minister ,Siddaramaiah ,Deputy ,TK Shivakumar ,Bengaluru ,Congress party ,Karnataka ,DK Shivakumar ,
× RELATED பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம்...