×

5 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி

தர்மசாலா: ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் 27வது லீக் ஆட்டத்தில், நியூசிலாந்து அணியுடன் மோதிய ஆஸ்திரேலியா 5 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை வசப்படுத்தியது.
இமாச்சல் கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீசியது. ஆஸி. தொடக்க வீரர்களாக வார்னர், காயத்தில் இருந்து மீண்ட டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 19 ஓவரில் 175 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது. வார்னர் 81 ரன் (65 பந்து, 5 பவுண்டரி, 6 சிக்சர்), ஹெட் 109 ரன் (67 பந்து, 10 பவுண்டரி, 7 சிக்சர்), ஸ்டீவன் ஸ்மித் 18 ரன் எடுத்து பிலிப்ஸ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். மிட்செல் மார்ஷ் 36 ரன் எடுத்து சான்ட்னர் சுழலில் கிளீன் போல்டானார். அடுத்து வந்த கிளென் மேக்ஸ்வெல் 41 ரன் (24 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்),

கடைசி கட்டத்தில் ஜோஷ் இங்லிஸ் 38 ரன், கேப்டன் பேட் கம்மின்ஸ் 37 ரன் (14 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர். ஸம்பா (0), ஸ்டார்க் (1) அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுக்க, ஆஸ்திரேலியா 49.2 ஓவரில் 388 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (48 ஓவரில் 387/6). நியூசிலாந்து பந்துவீச்சில் போல்ட், பிலிப்ஸ் தலா 3, சான்ட்னர் 2, ஹென்றி, நீஷம் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 50 ஓவரில் 389 ரன் எடுத்தால் வெற்றி என்ற மிகக் கடினமான இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. தொடக்க வீரர்கள் கான்வே 28, யங் 32 ரன்னில் வெளியேற, ரச்சின் – டேரில் மிட்செல் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 96 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தது. டேரில் 54 ரன், கேப்டன் லாதம் 21 ரன் எடுத்து ஸம்பா சுழலில் விக்கெட்டை பறிகொடுத்தனர். பிலிப்ஸ் 12 ரன்னில் வெளியேறினார்.

பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட்டு ஆஸி. பந்துவீச்சை சிதறடித்த ரச்சின் 116 ரன் (89 பந்து, 9 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி கம்மின்ஸ் வேகத்தில் லாபுஷேன் வசம் பிடிபட்டார். சான்ட்னர் 17, ஹென்றி 9 ரன்னில் பெவிலியன் திரும்பினாலும், மனம் தளராமல் போராடிய ஜேம்ஸ் நீஷம் அரை சதம் விளாசி ஆஸி. வீரர்கள் வயிற்றில் புளியைக் கரைத்தார். கடைசி ஓவரில் 19 ரன் தேவைப்பட்ட நிலையில், ஆஸி. தரப்பு பதற்றம் அடைந்தது. கடைசி 2 பந்தில் 7 ரன் என்ற பரபரப்பான நிலையில், நீஷம் (58 ரன், 39 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டானார். கடுமையாகப் போராடிய நியூசிலாந்து 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 383 ரன் எடுத்து 5 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. போல்ட் 10, பெர்குசன் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸி. பந்துவீச்சில் ஸம்பா 3, ஹேஸல்வுட், கம்மின்ஸ் தலா 2, மேக்ஸ்வெல் 1 விக்கெட் வீழ்த்தினர். ஹெட் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

The post 5 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி appeared first on Dinakaran.

Tags : Australia ,Dharamsala ,ICC World Cup ODI ,New Zealand ,Dinakaran ,
× RELATED தேர்தல் முடிந்துவிட்டதால் எந்த...