×

பிரதமரின் ஊழலை விசாரிக்கும் அதிகாரம் கொண்ட லோக்பால் அமைப்புக்கு 17 மாதமாக தலைவர் இல்லை

புதுடெல்லி: நாட்டில் பிரதமரின் ஊழல் வழக்கையே விசாரிக்கும் சிறப்பு அதிகாரம் கொண்ட லோக்பால் அமைப்புக்கு கடந்த 17 மாதங்களாக தலைவர் நியமிக்கப்படாமல் உள்ளது. பிரதமர், ஒன்றிய அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் என உயர் பதவியில் வகிப்பவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் விசாரிப்பதற்கு லோக்பால் என்ற அதிகாரம் பொருந்திய சிறப்பு அமைப்பை உருவாக்குவதற்கான சட்டம் கடந்த 2013ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதன்படி லோக்பால் அமைப்பை உருவாக்குவதில் ஒன்றிய அரசு தொடர்ந்து காலதாமதம் செய்து வந்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேர்வு குழு அளித்த பரிந்துரையின் பேரில் லோக்பால் அமைப்புக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கடந்த 2019ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி நியமனம் செய்யப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து நாட்டின் முதல் லோக்பால் தலைவராக உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு நீதிபதியான பினாகி சந்திர கோஷ் நியமிக்கப்பட்டார். மேலும் அவருடன் எட்டு உறுப்பினர்களும் அப்போது நியமிக்கப்பட்டனர்.
அதில், ‘‘நீதிபதிகள் திலீப் பி.போஸ்லே, பி.கே.மொஹந்தி, அபிலாஷா குமாரி, ஏ.கே.திரிபாதி மற்றும் தினேஷ் குமார் ஜெயின், அர்ச்சனா ராமசுந்தரம், மகேந்தர் சிங், ஐ.பி.கவுதம் உள்ளிட்டோர் அடங்குவர்.
இந்த நிலையில் 27.05.2022 வரை சுமார் இரண்டு வருடம், இரண்டு மாதம் நீதிபதி பினாகி சந்திர கோஷ் லோக்பால் அமைப்பின் தலைவராக இருந்தார். ஆனால் அதன் பின்னர் தற்போது வரையில் 17 மாதங்களாக லோக்பால் அமைப்புக்கு தலைவர் பதவி நியமிக்கப்படாமல் உள்ளது. இதில் லோக்பால் உறுப்பினராக இருந்த நீதிபதி பிரதீப் குமார் மொகந்தி லோக்பால் அமைப்பின் பொறுப்பு ( தற்காலிக ) தலைவராக கடந்த 2022ம் ஆண்டு மே 27ம் தேதி நியமனம் செய்யப்பட்டார். இதில் லோக்பால் அமைப்பை பொறுத்தமட்டில் தலைவர் இல்லாமல் மொத்தம் எட்டு உறுப்பினர்கள் இருக்க வேண்டும். ஆனால் அதிலும் தற்போது இரண்டு குறைவாக, பொறுப்பு தலைவராக இருக்கும் உறுப்பினர் நீதிபதி பிரதீப் குமார் மொகந்தி உட்பட ஆறு பேர் மட்டுமே இருக்கின்றனர்.

* ரூ.7.5 லட்சம் கோடி ஊழல்

ஒன்றிய அரசின் ஆயுஷ்மான் பாரத், பாரத் மாலா உள்ளிட்ட அரசு திட்டங்களில் ரூ.7.5 லட்சம் கோடி பாஜக ஆட்சியில் முறைகேடு நடந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் சி.ஏ.ஜி (ஒன்றிய தணிக்கைக்குழு) பகிரங்கமாக அறிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில், சிறப்பு அதிகாரம் கொண்ட லோக்பால் அமைப்புக்கு 17 மாதங்களாக தலைவரை நியமிக்காமல் இருப்பது மிகப்பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது.

The post பிரதமரின் ஊழலை விசாரிக்கும் அதிகாரம் கொண்ட லோக்பால் அமைப்புக்கு 17 மாதமாக தலைவர் இல்லை appeared first on Dinakaran.

Tags : Lokpal ,New Delhi ,Prime ,
× RELATED ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று டிஜிட்டல் கேஒய்சி