×

தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 5% குறைப்பு

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்து கட்டணத்தை 5 சதவீதம் வரை குறைக்க ஆம்னி பஸ் உரிமையாளர்கள் ஒப்புக் கொண்டு உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றசாட்டு வைக்கின்றனர். இதையடுத்து போக்குவரத்து துறை சார்பில் அவ்வப்போது சோதனைகள் நடத்தி கூடுதல் கட்டணம் உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபடும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆயூத பூஜையின்போது விதிமீறல்களில் ஈடுபட்ட 119 பேருந்துகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடர்ந்து, கடந்த செவ்வாய்க்கிழமை ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். பின்னர் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கட்டணத்தை நிர்ணயித்தனர். இந்த கட்டணமும் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்ட்டது.

இந்நிலையில் தீபாவளி பண்டிகை வரும் 12ம் தேதி கொண்டாடப்படும் நிலையில் ஆம்னி பேருந்துகள் கட்டண நிர்ணயம் குறித்து சென்னை எழிலகத்தில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினருடன் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் போக்குவரத்து துறை ஆணையர் சன்முக சுந்தரம், இணை ஆணையர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்திற்கு பின்னர், நிருபர்களிடம் அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது: தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்து கட்டணத்தை 5 சதவீதம் வரை குறைக்க ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ஒப்புக் கொண்டு உள்ளனர். கடந்த ஆண்டு 25 சதவீதம் குறைத்த நிலையில் இந்த ஆண்டு 5 சதவீத கட்டணங்களை குறைக்க ஒப்புக் கொண்டுள்ளனர். கடந்த தீபாவளி, பொங்கல் பண்டிகையின் போது ஆம்னி பேருந்துகள் கட்டண உயர்வு இல்லாமல் இயக்கப்பட்டதை போல் இந்த ஆண்டும் இயக்க உள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வு இல்லாமல் இருக்கும் சூழலில் பொதுமக்கள் நலன் கருதி இதை செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையை ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் வைத்த நிலையில் அதனை ஏற்றுக் கொண்டுள்ளனர்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இதை தொடர்ந்து, ஆம்னி பேருந்து கட்டணம் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து கோவைக்கு குறைந்தபட்சம் ரூ.1724, அதிகபட்சம் ரூ.2874, சென்னையில் இருந்து திருச்சிக்கு குறைந்தபட்சம் ரூ.1066, அதிகபட்சம் ரூ.1777 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

The post தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 5% குறைப்பு appeared first on Dinakaran.

Tags : Diwali ,Chennai ,Omni bus ,Dinakaran ,
× RELATED உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பஸ் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து