×

பிறந்து சில மணிநேரத்தில் பச்சிளம் ஆண்குழந்தை வீச்சு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது வந்தவாசி அரசு மருத்துவமனையில் பரபரப்பு

வந்தவாசி, அக்.29: வந்தவாசி அரசு மருத்துவமனை வளாகத்தில் பிறந்த சில மணிநேரத்திலேயே வீசப்பட்டிருந்த பச்சிளம் ஆண் குழந்தையை மீட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அரசு மருத்துவமனை துப்புரவு பணியாளர்கள் நேற்று காலை மருத்துவ கழிவுகளை கொட்டுவதற்காக அங்குள்ள சவகிடங்கு அருகே சென்றுள்ளனர். அப்போது அங்கே பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று தொப்புள் கொடி அறுக்கப்படாத நிலையில் வீசப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து, மருத்துவமனை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மருத்துவ அலுவலர் சிவப்பிரியா லோகேஷ்வரன் மற்றும் மருத்துவ அலுவலர்கள் அங்கு சென்று குழந்தையை மீட்டு சிகிச்சை அளித்தனர்.

அப்போது குழந்தைக்கு சுவாசம் குறைவாக இருந்ததால், 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செயற்கை சுவாசத்துடன் அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் வந்தவாசி அரசு மருத்துவமனை நிர்வாகம் சார்பில், வந்தவாசி தெற்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராமு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். தகாத உறவில் பிறந்ததால் குழந்தையை வீசிவிட்டு சென்றார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமாக குழந்தையை வீசினார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து குழந்தையின் தாயை தீவிரமாக தேடி வருகின்றனர். பிறந்து சில மணிநேரத்தில் பச்சிளம் குழந்தையை சவக்கிடங்கு அருகே வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post பிறந்து சில மணிநேரத்தில் பச்சிளம் ஆண்குழந்தை வீச்சு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது வந்தவாசி அரசு மருத்துவமனையில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Vandavasi Government Hospital ,Vandavasi ,
× RELATED 500 மீட்டர் தூரம் சிதறிய கல் தலையில்...