×

கிணற்றில் தவறி விழுந்து 2 பெண் குழந்தைகள் பலி போளூர் அருகே சோகம்

போளூர், அக்.29: போளூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 2 பெண் குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த பெரியகரம் பனந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன், கூலித்தொழிலாளி. இவரது மனைவி பிரீத்தி. இவர்களது மகள் சிந்துபாரதி(2). ஒரு வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. பிரீத்தியின் அண்ணன் காம்பட்டு கிராமத்தை சேர்ந்த அசிர். இவரது மனைவி காவியா. இவர்களது மகள் பவ்ய(2). அசிர்- காவியா தம்பதியினர் பெரியகரம் பனந்தோப்பில் தங்கையின் வீட்டிலேயே தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை காவியா அருகில் உள்ள கரும்பு தோட்டத்திற்கு இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார். அப்போது அவரை தேடி சென்ற குழந்தைகள் சிந்துபாரதி, பவ்ய இருவரும், வழிதவறி அருகில் உள்ள சேகர் என்பவருக்கு சொந்தமான நிலத்துக்கு சென்றுள்ளனர். மேலும் அங்குள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்து 2 குழந்தைகளும் பரிதாபமாக இறந்தன. பின்னர் வீட்டிற்கு சென்ற காவியா குழந்தைகள் இல்லாததால், பல்வேறு இடங்களில் தேடினார். அப்போது விவசாய கிணற்றில் குழந்தைகள் சடலமாக மிதந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். மேலும் போளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தைகளின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு போளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தமிழ்செல்வன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நேரத்தில் 2 குழந்தைகள் கிணற்றில் தவறி விழுந்து பலியான சம்பவம் கிராம மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

The post கிணற்றில் தவறி விழுந்து 2 பெண் குழந்தைகள் பலி போளூர் அருகே சோகம் appeared first on Dinakaran.

Tags : Polur ,Bolur ,
× RELATED கரும்பு நிலுவை தொகையில் 50 சதவீதம் ₹13.18...