×

ஐப்பசி மாத பவுர்ணமி கிரிவலம் திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ், ரயில்கள் இயக்கம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். அதன்படி, ஐப்பசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் இன்று(28ம் தேதி) அதிகாலை 4.02 மணிக்கு தொடங்கி, நாளை (29ம்தேதி) அதிகாலை 2.48 மணிக்கு நிறைவடைகிறது. இதையொட்டி இன்று அதிகாலை அண்ணாமலையார் கோயிலில் நடை திறக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சி, கோபூஜை நடைபெற்றது.

பின்னர் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்துவருகின்றனர். மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலை முதலே கிரிவலம் சென்றனர். ஐப்பசி மாதம் அஸ்வினி நட்சத்திரத்தன்று சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது வழக்கம். அதன்படி, அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற அன்னாபிஷேக விழா இன்று நடக்கிறது. இதையொட்டி மாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதியில்லை. அதைத்தொடர்ந்து, மாலை 6 மணிக்கு பிறகு வழக்கம்போல தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

* சிறப்பு பஸ், ரயில்கள்

அதேபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானாவில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் பக்தர்களின் வசதிக்காக தென்னக ரயில்வே சார்பில் இன்றும் நாளையும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி சென்னை பீச்-வேலூர் கன்டோன்மென்ட்-திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் வேலூர் கன்டோன்மென்டில் இருந்து இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் இந்த ரயில் நாளை அதிகாலை திருவண்ணாமலையில் இருந்து 3.45 மணிக்கு புறப்பட்டு வேலூர் கன்டோன்மென்ட் வந்தடைகிறது. அதேபோல் விழுப்புரத்தில் இருந்து சிறப்பு ரயில் இன்று காலை 9.15 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலையை காலை 11 மணிக்கு வந்தடைந்தது.

The post ஐப்பசி மாத பவுர்ணமி கிரிவலம் திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ், ரயில்கள் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,Krivalam ,Aipasi ,Aippasi ,
× RELATED அண்ணாமலையார் கோயிலில் போலீஸ்...