×

தேவர் நினைவாலயத்தில் மலர் வளையம் வைக்க தடை, மாலை மட்டுமே அணிவிக்க வேண்டும் : ராமநாதபுரம் கலெக்டர் உத்தரவு!!

ராமநாதபுரம் : பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவாலயத்தில் மலர் வளையம் வைக்க தடை விதித்து ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் ஆண்டுதோறும் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா, குருபூஜை விழா நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டு 116வது ஜெயந்தி விழா, 61வது குருபூஜை விழா, அக். 28ம்தேதி ஆன்மிக விழா, 29ம் தேதி அரசியல் விழா, 30ம் தேதி ஜெயந்தி மற்றும் குருபூஜை அரசு விழா என நடக்க உள்ளது. இதன்படி தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் தலைமையில், இன்று காலை கணபதி ஹோமம் உள்ளிட்ட யாகசாலை பூஜைகளுடன் ஆன்மிக விழா தொடங்கியது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள், லட்சார்ச்சனை, மாலையில் உலக நன்மை வேண்டி 1008 திருவிளக்கு பூஜைகள் நடக்கிறது.

நாளை காலை 2ம் நாள் யாகசாலை பூஜை, லட்சார்ச்சனை மற்றும் அரசியல் விழா நடக்கிறது. இதில் பல்வேறு பகுதியில் இருந்து வரும் பொதுமக்கள் பால்குடம், வேல், காவடி, அக்னிச்சட்டி, முளைப்பாரி எடுத்து வந்து தேவர் நினைவாலயத்தில் செலுத்த உள்ளனர். 30ம் தேதி காலையில் தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்று மரியாதை செலுத்த உள்ளனர். ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொள்வார் என தெரிகிறது. மேலும் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சி தலைவர்கள் பலரும் மரியாதை செலுத்த உள்ளனர் இந்த நிலையில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவாலயத்தில் மலர் வளையத்திற்கு பதிலாக மாலை அணிவிக்க வேண்டும் என்று ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், பசும்பொன் தேவர் திருமகனாரின்116வது பிறந்தநாள் விழா மற்றும் 61வது குருபூஜை விழா 30.10.2023 அன்று நடைபெறுவதையொட்டி, அரசு விழா நிகழ்ச்சியில் பசும்பொன் தேவர் திருமகனாரின் வாரிசு தாரர்கள் மற்றும் சமுதாய மக்களின் வேண்டுகோளுக்கிணங்க மலர்வளையத்திற்கு பதிலாக அன்னாரின் திருவுருவச்சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்கள் என செய்து குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தேவர் நினைவாலயத்தில் மலர் வளையம் வைக்க தடை, மாலை மட்டுமே அணிவிக்க வேண்டும் : ராமநாதபுரம் கலெக்டர் உத்தரவு!! appeared first on Dinakaran.

Tags : Devar memorial ,Ramanathapuram ,Collector ,Vishnu Chandran ,Pasumbon Muthuramalingath ,
× RELATED கடற்கரை கிராமங்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை