×

வந்தே பாரத் ரயிலை போன்ற வசதிகளுடன் குறைந்த கட்டணத்தில் வருகிறது ‘வந்தே சாதாரண்’ அதிவேக ரயில்: அரக்கோணம்- சென்னை இடையே சோதனை ஓட்டம்

அரக்கோணம்: வந்தே பாரத் ரயிலை போன்ற வசதிகளுடன் குறைந்த கட்டணத்தில் ஏழைகளுக்கான ‘வந்தே சாதாரண்’ அதிவேக ரயில் சேவை விரைவில் தொடங்குகிறது. இதற்காக, அரக்கோணம்-சென்னை இடையே சோதனை ஓட்டம் நடந்தது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு ரயில் வழித்தடங்களில் ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த ரயில் அனைத்து வசதிகளுடன் கூடிய அதிவேக ரயிலாகும். ஆனால், அதிக கட்டணம் என்பதால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனை போக்கும் வகையில் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயன்படுத்தும் வகையில் அதிநவீன வசதிகளுடன் கூடிய ‘வந்தே பாரத்’ ரயில் போன்று ‘வந்தே சாதாரண்’ என்ற புதிய ரயிலை வடிவமைத்து இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து, சென்னை ஐசிஎப்பில் ‘வந்தே சாதாரண்’ ரயில் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டது. அதன் சோதனை ஓட்டம் நேற்று முன்தினம் சென்னை-அரக்கோணம் இடையே நடந்தது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ஏழை, எளிய, நடுத்தர மக்கள் என்று அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வகையில் வந்தே சாதாரண் ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. விரைவில் பல்வேறு ரயில் வழித்தடங்களில் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலின் சோதனை ஓட்டம் சுமார் 130 கிலோ மீட்டர் வேகத்தில் சென்னை வில்லிவாக்கம்-அரக்கோணம், அரக்கோணம்- சென்னை வில்லிவாக்கம் இடையே நடத்தப்பட்டது.

சென்னை ஐசிஎப்பில் வடிவமைக்கப்பட்ட இந்த பெட்டிகளில் செல்போன் சார்ஜர், குஷன்சீட், நவீன கழிவறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் ரயிலின் முன்பக்கம் மற்றும் பின்பக்கம் பொருத்தப்பட்ட இன்ஜினை இயக்கும்(புஷ் புல் ரேக் முறையில்) வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 22 பெட்டிகளுடன் கூடிய இந்த ரயிலில் கட்டணம் குறைவாக இருக்கும் என்பதால் அனைவரும் பயன்படுத்தலாம். விரைவில் இந்த ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post வந்தே பாரத் ரயிலை போன்ற வசதிகளுடன் குறைந்த கட்டணத்தில் வருகிறது ‘வந்தே சாதாரண்’ அதிவேக ரயில்: அரக்கோணம்- சென்னை இடையே சோதனை ஓட்டம் appeared first on Dinakaran.

Tags : Vande Badhal ,Vande Bharat ,Arakkonam ,Chennai ,Vande Bhadhal ,Bharat ,Dinakaran ,
× RELATED சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயில் இன்று ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு