×

திமுக கூட்டணி கட்சிகள் மீது பழிபோடும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் நோக்கம் முறியடிக்கப்படும்: வைகோ திட்டவட்டம்

சென்னை: குண்டு வீச்சு விவகாரத்தில் திமுக கூட்டணி கட்சிகள் மீது பழிபோடும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் நோக்கம் முறியடிக்கப்படும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ராஜ்பவன் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக, ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பில், “பல மாதங்களாக, கவர்னரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் தாக்குதல்கள் அரங்கேறி வருகின்றன. தி.மு.க., தலைவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியினர் மிரட்டல் விடும் வகையில் பேசி வருகின்றனர். கவர்னரை பணி செய்ய விடாமல் தடுக்கும் வகையில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.இது விஷமத்தனமானது.

அரசியல் சாசனத்தின் அடிப்படையில் செயல்பட வேண்டிய ஆளுநர், மரபுகளை மீறுவதால் அரசியல் கட்சிகள் கண்டனம் செய்கின்றன. சட்ட முன் வரைவுகளுக்கு அனுமதி தராமல், தானடித்த மூப்பாக ஆளுநர் செயல்படுவது கண்டனத்துக்குரியது தான். ஆனால் இதையெல்லாம் திசை திருப்புகிற வகையில் திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் மீது ஆளுநர் பழி போட்டு இருப்பது, ஆளுநர் மாளிகை பாஜவின் அரசியல் கூடாரமாக மாறி இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தமிழ்நாட்டில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தி, அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் சக்திகள் சூத்திரதாரியாக இருந்து ஆளுநரை பயன்படுத்துகின்றனர் என்பதை தமிழக மக்கள் நன்றாகவே அறிவார்கள். இத்தகைய முயற்சிகள் முறியடிக்கப்படும் என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்கிறேன்.

The post திமுக கூட்டணி கட்சிகள் மீது பழிபோடும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் நோக்கம் முறியடிக்கப்படும்: வைகோ திட்டவட்டம் appeared first on Dinakaran.

Tags : Governor RN Ravi ,DMK ,Madhya Pradesh ,Madhyamik ,Governor RN ,Ravi ,
× RELATED ஆளுநர் ஆர்.என்.ரவியை வெளியேற்ற...