×

கிரெடிட் கார்டை செயலிழக்க வைப்பதாக ரூ.1.25 லட்சம் நூதன மோசடி: மர்ம கும்பலுக்கு வலை

புழல்: கிரெடிட் கார்டை செயலிழக்க வைப்பதாக கூறி, தனியார் நிறுவன ஊழியரிடம் ஓடிபி எண்ணை பெற்று, அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.1.25 லட்சம் மோசடி செய்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். புழல் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் கிருபாகரன் (43) என்பவரின் செல்போனுக்கு சமீபத்தில் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், வங்கியில் இருந்து பேசுகிறேன். நீங்கள் வாங்கிய கிரெடிட் கார்டை ஏன் ஆக்டிவேட் செய்யாமல் வைத்துள்ளீர், என கேட்டுள்ளார். அதற்கு கிருபாகரன், எனக்கு கிரெடிட் கார்டு தேவையில்லை. அதை செயலிழக்க செய்யவேண்டும், என கூறியுள்ளார். அதற்கு அந்த நபர், கிரெடிட் கார்டை செயலிழக்க வைப்பதற்கு, உங்கள் செல்போனுக்கு வரும் ஓடிபி நம்பரை கூறுங்கள், என கேட்டுள்ளார்.

அதன்படி கிருபாகரனும் தனது செல்போனுக்கு வந்த ஓடிபி நம்பரை கூறியுள்ளார். சிறிது நேரத்தில் கிருபாகரனின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1,25,074 எடுக்கப்பட்டதாக செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த கிருபாகரன், ஆன்லைன் மோசடி கும்பலிடம் சிக்கி பணத்தை இழந்ததை அறிந்தார். இதுதொடர்பாக புழல் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் மோசடி, தொழில்நுட்ப சட்டப்பிரிவு என இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட மர்ம கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். புழல் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து ஆன்லைன் மோசடி சம்பவங்கள் நடந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post கிரெடிட் கார்டை செயலிழக்க வைப்பதாக ரூ.1.25 லட்சம் நூதன மோசடி: மர்ம கும்பலுக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Puzhal ,
× RELATED புழல் சிறையில் பரபரப்பு காவலருக்கு...