×

27வது லீக் ஆட்டத்தில் இன்று ஆஸ்திரேலியா – நியூசிலாந்து பலப்பரீட்சை

தர்மசாலா: ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் 27வது லீக் ஆட்டத்தில், புள்ளிப் பட்டியலில் 3வது, 4வது இடங்களில் உள்ள நியூசிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. நியூசிலாந்து 5 ஆட்டங்களில் 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 3வது இடத்தில் உள்ளது. இந்தியாவுடன் விளையாடிய லீக் ஆட்டத்தில் மட்டுமே அந்த அணி மண்ணைக் கவ்வியது. ஆஸ்திரேலியா 2 தோல்வி, 3 வெற்றியுடன் 6 புள்ளிகள் பெற்று 4வது இடம் வகிக்கிறது. அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்துள்ள இந்த அணிகள், அதை மேலும் பிரகாசமாக்கிக் கொள்ளும் முனைப்புடன் இன்று களமிறங்குகின்றன.

பலம் வாய்ந்த அணிகள் மோதும் இந்த போட்டி, தர்மசாலா இமாச்சல் கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் காலை 10.30க்கு தொடங்குகிறது. காயத்தால் அவதிப்படும் வில்லியம்சன் இன்னும் முழுமையாக குணமடையாததால், நியூசி. கேப்டனாக லாதம் தொடர்ந்து செயல்பட உள்ளார். அந்த அணியில் மாற்றம் ஏதும் இருக்காது எனத் தெரிகிறது. ஆல் ரவுண்டர் ரச்சின் ரவிந்த்ரா சிறப்பாகப் பங்களித்து வருகிறார். பின் வரிசையில் டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ் அதிரடியாக விளையாடுவது நியூசி. பேட்டிங்குக்கு வலு சேர்த்துள்ளது. போல்ட், பெர்குசன், சான்ட்னர், ரச்சின் பந்துவீச்சை சமாளிப்பது ஆஸி. பேட்ஸ்மேன்களுக்கு சவாலாகவே இருக்கும்.

அதே சமயம், முன்னணி வீரர்கள் வார்னர், மார்ஷ், ஸ்மித், லாபுஷேன், மேக்ஸ்வெல் ஆகியோர் நல்ல ஃபார்மில் இருப்பது, முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. விக்கெட் வேட்டை நடத்தும் ஆடம் ஸம்பா, ஆஸி. அணியின் முக்கிய துருப்புச்சீட்டாக விளங்குகிறார். கேப்டன் கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசல்வுட், கிரீன், ஸ்டாய்னிஸ் என வேகப் பந்துவீச்சு கூட்டணியும் நியூசி. பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்க காத்திருக்கிறது. இரு அணிகளுமே வெற்றிக்காக வரிந்துகட்டுவதால், இன்றைய ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

ஆஸ்திரேலியா: கம்மின்ஸ் (கேப்டன்), அப்பாட், கேரி, கிரீன், ஹேசல்வுட், ஹெட், இங்லிஸ், லாபுஷேன், மார்ஷ், மேக்ஸ்வெல், ஸ்மித், ஸ்டார்க், ஸ்டாய்னிஸ், வார்னர், ஸம்பா.

நியூசிலாந்து: வில்லியம்சன் (கேப்டன்), லாதம் (துணை கேப்டன்), போல்ட், சாப்மேன், கான்வே, பெர்குசன், ஹென்றி, டேரில், நீஷம், பிலிப்ஸ், ரச்சின், சான்ட்னர், சோதி, சவுத்தீ, வில் யங்.

* இரு அணிகளும் 141 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளதில் ஆஸி. 95 – 39 என ஆதிக்கம் செலுத்தியுள்ளது (7 ஆட்டம் ரத்து).
* வெளிநாடுகளில் விளையாடிய 19 ஆட்டங்களில் ஆஸி. 18-1 என முன்னிலை வகிக்கிறது.
* கடைசியாக மோதிய 5 ஆட்டங்களிலும் ஆஸி. அணியே வென்றுள்ளது.
* இந்திய மண்ணில் ஆஸி.யுடன் 8 முறை மோதியுள்ள நியூசி. ஒன்றில் கூட வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
* தர்மசாலாவில் ஆஸி. முதல் முறையாக விளையாடுகிறது. இங்கு 3வது முறையாக விளையாட உள்ள நியூசி. ஏற்கனவே நடந்த 2 ஆட்டங்களிலும் இந்தியாவிடம் தோற்றுள்ளது.
* இரு அணிகளும் உலக கோப்பையில் 11 முறை மோதியுள்ளதில் ஆஸி. 8, நியூசி 3ல் வென்றுள்ளன.

The post 27வது லீக் ஆட்டத்தில் இன்று ஆஸ்திரேலியா – நியூசிலாந்து பலப்பரீட்சை appeared first on Dinakaran.

Tags : league ,Australia ,New Zealand ,Dharamsala ,ICC World Cup ODI ,Dinakaran ,
× RELATED 2வது டி20 போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி: தொடரை கைப்பற்றியது