×

தெலங்கானா சட்டமன்ற தேர்தல்: சர்மிளாவுக்கு பைனாகுலர் சின்னம்

திருமலை: தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் சர்மிளாவின் ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சிக்கு பைனாகுலர் சின்னம் கிடைத்துள்ளது. ஆனால் அந்த சின்னத்திற்கு பதிலாக வேறு சின்னம் வேண்டும் என்று அக்கட்சி உடனடியாக மேல்முறையீடு செய்துள்ளது. ஆந்திர முதல்வர் ெஜகன்மோகனின் தங்கை சர்மிளா, தெலங்கானா அரசியலில் ஈடுபட்டுள்ளார். தெலங்கானா மாநிலத்தில் அடுத்த மாதம் 30ம்தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. தெலங்கானாவில் மொத்தம் 119 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் காங்கிரசுடன் கைகோர்த்து தேர்தல் களம் காண சர்மிளா விரும்பினார்.

அதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் தனது கட்சியை காங்கிரசில் சேர்க்கவும் முயற்சித்தார். ஆனால் கடைசிவரை அவரை காங்கிரஸ் கண்டுகொள்ளவில்லை. இதனால் கடும் மன உளைச்சல் அடைந்த சர்மிளா 119 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து தேர்தல் பணியை தொடங்கினார். இந்நிலையில் தெலங்கானாவில் உள்ள 119 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட வேட்பாளர் தேர்வை சர்மிளா தொடங்கியுள்ளார். தனது கட்சிக்கு பொது சின்னம் கோரி தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டிருந்தார். இதில் நேற்று அவரது கட்சிக்கு ‘பைனாகுலர்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

ஆனால் அந்த சின்னத்தை சர்மிளா விரும்பவில்லை. தங்களுக்கு ஏர் உழும் விவசாயி சின்னம் அல்லது பாம்பு புற்று சின்னம் ஆகிய 2ல் ஒன்றை ஒதுக்க வேண்டும் என்று சர்மிளா விரும்புவதாக தெரிகிறது. இதுதொடர்பாக தேர்தல் ஆணைத்திடம் நேற்றிரவு அவர் முறையிட்டுள்ளார்.

The post தெலங்கானா சட்டமன்ற தேர்தல்: சர்மிளாவுக்கு பைனாகுலர் சின்னம் appeared first on Dinakaran.

Tags : Telangana Assembly Election ,Sharmila ,Thirumalai ,YSR Telangana party ,Telangana Assembly ,
× RELATED பித்தத்தைத் தடுக்கும் பருப்புக்கீரை!