×

போக்குவரத்து ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்த தமிழ்நாடு அரசுக்கு சிஐடியூ தொழிற்சங்கம் நன்றி

சென்னை: போக்குவரத்து ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 20% அறிவித்த தமிழக அரசுக்கு சிஐடியூ தொழிற்சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் சிஐடியூ தொழிற்சங்க செயலாளர் ஆறுமுக நயினார் பேட்டியளித்துள்ளார். அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளித்து அறிவித்த அடுத்த நாளே, போக்குவரத்து கழகங்கள், மின் வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமிக்க மாநிலமாக தமிழ்நாட்டை நிலை நிறுத்துவதில் தொழிலாளர்களின் உழைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, தமிழ்நாடு அரசின் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் வகையில், 2022-23ம் ஆண்டுக்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திருத்தப்பட்ட மிகை ஊதியச் சட்டம் 2015ன்படி, மிகை ஊதியம் பெறத் தகுதியான சம்பள உச்சவரம்பு ரூ.21000 என உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்படி மிகை ஊதியம் கணக்கிட இருந்த மாதாந்திர உச்சவரம்பும் ரூ.7000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி 2022-23ம் ஆண்டுக்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை கீழ்க்கண்டவாறு வழங்கப்படும். லாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அந்தந்த நிறுவனங்களின் ஒதுக்கப்படக்கூடிய உபரி தொகையை கணக்கில் கொண்டு 8.33 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு 8.33 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 20 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும். நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு குறைந்தபட்ச மிகை ஊதியம் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 10 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் பணிபுரியும் தகுதியுடைய ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகை வழங்கப்படும். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் தகுதியுடைய ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு மிகை ஊதியம் வழங்கப்படும். இது தவிர தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ.3,000 கருணைத் தொகையாக வழங்கப்படும்.

இதனால் மிகை ஊதியம் பெற தகுதியுள்ள நிரந்தர தொழிலாளர்கள் குறைந்த பட்சம் ரூ.8400மும், அதிகபட்சம் ரூ.16800மும் பெறுவர். தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2 லட்சத்து 83 ஆயிரத்து 787 தொழிலாளர்களுக்கு ரூ.402 கோடியே 97 லட்சம் மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகையாக வழங்கப்படும். அரசின் இந்த நடவடிக்கை பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் எதிர் வரும் விழாக்காலங்களை மகிழ்ச்சியுடன் கொண்டாட வழிவகை செய்யும். இந்நிலையில் போக்குவரத்து ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 20% அறிவித்த தமிழக அரசுக்கு சிஐடியூ தொழிற்சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

The post போக்குவரத்து ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்த தமிழ்நாடு அரசுக்கு சிஐடியூ தொழிற்சங்கம் நன்றி appeared first on Dinakaran.

Tags : CITU union ,Tamil Nadu government ,CHENNAI ,Dinakaran ,
× RELATED மலைச்சரிவுகளைத் தடுத்து மக்களைக்...