×

கழுகுமலையில் அதிகரிக்கும் குரங்குகள் அட்டகாசம் கூண்டுவைத்து பிடிக்கப்படுமா ?

கழுகுமலை: கழுகுமலையில் குரங்குகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அவதிப்படும் மக்கள், இவற்றை விரைவில் கூண்டுவைத்து பிடிக்கப்படுமா? என எதிர்பார்க்கின்றனர். கழுகுமலையில் உள்ள கழுகாசலமூர்த்தி கோயில் மிகவும் பிரசித்திப் பெற்றது. மலையை குடைந்து அமைக்கப்பட்ட குடவரை கோயிலான இது, முற்காலப் பாண்டியர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதேபோல் அவர்களது காலத்திலேயே கழுகுமலை மலை மீதுள்ள சமணப்பள்ளி மற்றும் வெட்டுவான் கோயிலும் அமைக்கப்பட்டுள்ளது. கடினமான பாறையை சதுரமாக வெட்டியெடுத்து அதன் நடுப்பகுதி பாறையை கோயிலாகச் செதுக்கப்பட்டுள்ளது. இதை வெட்டுவான் கோயில் என அழைக்கின்றனர். இத்தகைய கோயில், தமிழகத்திலேயே இது ஒன்றுதான் என்பது இதன் சிறப்பு. வரலாற்று சின்னங்களாக உள்ள இவற்றை தமிழகம் மட்டுமின்றி வெளிநாட்டினரும் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். மேலும் மலை மீதுள்ள சமணர் சிற்பங்கள், உச்சியில் உள்ள பிள்ளையார் கோயில் ஆகியவையும் சுற்றுலா பயணிகளை கவர்ந்தவையாகும். கழுகுமலையில் உள்ள மலை தமிழக அரசின் தொல்லியல்துறை கட்டுபாட்டில் பாதுகாக்கப்பட்ட மரபு சின்னமாக உள்ளது.

அந்த துறை சார்பில் அங்கு ஒரு காவலாளி நியமிக்கப்பட்டுள்ளார். சிறப்பு வாய்ந்த கழுகுமலையை புராதன நகராக கடந்த 2014ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இந்நிலையில் கழுகுமலை மலைப்பகுதி, அரண்மனை வாசல் தெரு, வட்டத் தெரு, அண்ணா புதுத்தெரு, கோயில் வாசல் பகுதிகளில் குரங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவை, பொதுமக்கள் கைகளில் உள்ள பொருட்களை பறித்துச் செல்கின்றன. இதனால் அவதிப்படும் மக்கள், இவரை விரைவில் கூண்டுவைத்து பிடிக்கப்படுமா? என எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து கழுகுமலை அண்ணா புது தெருவில் வசித்துவருவோர் ‘‘எங்கள் தெரு அருகேயுள்ள செல்போன் கோபுரத்தில் வசித்துவரும் நூற்றுக்கணக்கான குரங்குகள், வீடுகளுக்கு வெளியே காய வைக்கப்படும் உணவுப்பொருட்களை எடுத்துச் செல்கின்றன. அத்துடன் இங்குள்ள கடைகளிலும் புகுந்து அனைத்துப் பொருட்களையும் தூக்கிச் செல்கின்றன. மேலும் சிறு குழந்தைகள் கையில் கொண்டுசெல்லும் திண்பண்டம் உள்ளிட்ட அனைத்து உணவு பொருட்களையும் கவர்ந்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளன.

இவ்வாறு அட்டகாசம் செய்ய குரங்குகளை விரட்ட முயற்சிப்போரையும் தாக்குகின்றன. இதனால் நாங்கள் சொல்லொண்ணா துயரங்களை அனுதினமும் சந்தித்து வருகிறோம்.
மேலும், மலைப்பகுதிக்கு சுற்றுலாவாக வருகை தரும் பயணிகளையும் குரங்குகள் அச்சுறுத்துவது தொடர் கதையாக உள்ளது. இவ்வாறு அட்டகாசம் செய்துவரும் குரங்குகளை உடனடியாகப் பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விடவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு’’ என்றனர்.

The post கழுகுமலையில் அதிகரிக்கும் குரங்குகள் அட்டகாசம் கூண்டுவைத்து பிடிக்கப்படுமா ? appeared first on Dinakaran.

Tags : Kalgukumalai ,
× RELATED இலவச பட்டா வழங்கிய இடத்தில் குடியேறி பொதுமக்கள் போராட்டம்