×

பனியன் மாநகரில் தினம் தோறும் சாக்கடை கால்வாய்களில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவால் சுகாதாரக்கேடு

*மாநகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்கள், பாலித்தீன் பைகள் சாக்கடை கால்வாய்களில் தினமும் வீசி எறியப்படுவதால் சுகாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் முன் வரவேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

20 மைக்ரான் அளவுக்கு குறைவான ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் டம்ளர்கள், பாலித்தீன் பைகள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்வதற்கும், அதை வாங்கி பயன்படுத்துவதற்கும் அரசு தடை விதித்துள்ளது.

திருப்பூர் மாநகராட்சி பகுதியிலும் இது நடைமுறைப்படுத்தப்படுகிறது. இருப்பினும் இந்த பிளாஸ்டிக் பொருட்களின் விற்பனையும், பயன்பாடும் குறைந்ததாக தெரியவில்லை. பாலித்தீன் பைகள், பேக்கரி, டீக்கடைகளில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் குவளைகள் ஆகியவற்றை ரோட்டோரம் உள்ள சாக்கடை கால்வாயில் வீசி சென்று விடுகிறார்கள். அத்துடன் வீதிகளில் வீசப்படும் இவைகளும் காற்றில் அடித்துச்செல்லப்பட்டு சாக்கடைகளில் விழுகின்றன. இந்த டம்ளர்கள் பாலித்தீன் பைகள் கால்வாயை அடைத்து கழிவுநீர் தங்கு தடையின்றி செல்ல முடியாமல் தடுத்து விடுகிறது.

சமீபகாலமாக திருப்பூர் மாநகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் குப்பைகள் அடைப்பு காரணமாக சாக்கடை கால்வாய்களில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி ரோட்டில் வழிந்தோடுகிறது. இதனால் சுகாதாரசீர்கேடு ஏற்படுவதுடன் நோய் பரவவும் வாய்ப்பாகிறது. திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள போதிய துப்புரவு பணியாளர்கள் இல்லாத நிலை இருந்து வருகிறது. இதன்காரணமாக மாநகரில் பெரும்பாலான சாக்கடை கால்வாய்களில் பிளாஸ்டிக் கழிவுகள் அடைக்கப்பட்டு மாதக்கணக்கில் கழிவுநீர் தேங்கி, அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

கழிவுநீர் தேங்கி வீதியில் வழிந்தோடும் போது வாகன ஓட்டுனர்கள், பாதசாரிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள். மாநகரின் முக்கிய சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய் மேல்பகுதியில் கடைக்காரர்கள், வர்த்தக நிறுவனத்தினர் சிமெண்டு தடுப்புகளை அமைத்து படிக்கட்டுகளை கட்டி ஆக்கிரமித்துள்ளனர். இதனால் கால்வாயில் ஏற்படும் அடைப்புகளை நீங்குவதற்கு கூட முடியாமல் துப்புரவு பணியாளர்கள் திணறி வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, பிளாஸ்டிக் கழிவுகளை வீதியில் வீசுவதால் மழைக்காலங்களில் மழைநீர் இந்த பிளாஸ்டிக் குவளைகள், பாலித்தீன் பைகளில் தேங்கி விடுகிறது. நாட்கணக்கில் தேங்கி இருக்கும் இந்த தண்ணீரில் டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்களை பரப்பும் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகி நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.

ஆகவே, இந்த பிரச்னைகளை தவிர்க்க திருப்பூர் மாநகர பகுதியில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் டம்ளர்கள் பாலித்தீன் பைகள் ஆகியவற்றை முழுமையாக தடை செய்ய வேண்டும் என்றும், தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post பனியன் மாநகரில் தினம் தோறும் சாக்கடை கால்வாய்களில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவால் சுகாதாரக்கேடு appeared first on Dinakaran.

Tags : Banyan City ,Tirupur ,Banyan Municipal Corporation ,Dinakaran ,
× RELATED திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்...