×

தக்கலை அருகே பொதுமக்களை ஏமாற்றி பல லட்சம் ரூபாய் மோசடி

*இளம் பெண் கைது

குமாரபுரம் : குமரி மாவட்டம் குமாரபுரம் அருகே செங்கோடி முதலார் பகுதியை சேர்ந்தவர் கிங்ஸ்லி (34). கட்டிட காண்டிராக்டர். இவருடன் கல்லூரி படித்த தோழி அஜி என்ற ஷர்மி(32). இவர் திருமணமாகி குமாரபுரம் அருகே கன்றுபிலாவிளை பகுதியில் வசித்து வருகிறார். இவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் அஜி, கிங்ஸ்லியிடம் , தனது நகை அடகில் இருப்பதாகவும் ஏலத்தில் போக உள்ளதாகவும் கூறி கடன் கேட்டுள்ளார்.

நகையை மீட்டு அடகு வைத்து பணத்தை திரும்ப கொடுப்பதாகவும் கூறியதாக தெரிகிறது.இதையடுத்து கிங்ஸ்லி கடந்த ஜூலை 8ம் தேதி ஒரு லட்சம், 10ம் தேதி ஒரு லட்சம் பின்னர் மேலும் ₹43500 என்று மொத்தம் 2 லட்சத்து 43 ஆயிரத்து 500 ரூபாயை கூகுள் பே மூலம் அனுப்பி கொடுத்துள்ளார். ஆனால் அஜி பணத்தை திரும்ப கொடுக்கவில்லை. கேட்கும்போது ஏதாவது ஒரு காரணத்தை கூறி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 8ம் தேதி பணத்தை கேட்க அஜி வீட்டிற்கு கிங்ஸ்லி சென்றுள்ளார்.

அப்போது வீட்டில் அவர் இல்லை. அப்பகுதியினரிடம் ேகட்டபோது, பலரிடம் இதுபோல் பணம் வாங்கி ஏமாற்றியுள்ளது தெரிய வந்தது. இது குறித்து கொற்றிக்கோடு போலீசில் கிங்ஸ்லி புகார் அளித்தார். இதற்கிடையே தக்கலையை சேர்ந்த நண்பருடன் அஜி தலைமறைவானார்.போலீசார் அவரை பல்வேறு இடங்களிலும் தேடி வந்தனர். இந்த நிலையில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தலைமறைவாக இருந்த அஜியை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அஜியை போலீசார் கொற்றிக்கோடு காவல்நிலையம் ெகாண்டு வந்தனர். தகவல் அறிந்து அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் காவல் நிலையத்தில் திரண்டனர். விசாரித்த போது பூரணி ஷைலா என்பவரிடம் 14 பவுன் நகை மற்றும் ₹2 லட்சம் ரொக்கம், ஜெரோன் மல்பா என்பவரிடம் ₹2.5 லட்சம், உஷா என்பவரிடம் ₹ 6 லட்சத்து 90 ஆயிரம் வாங்கியுள்ளார். மேலும் தங்கம் என்பவரின் ஆதார் கார்டு பயன்படுத்தி பவுடா குழுவில் ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளதும் தெரிய வந்தது. அஜி மேலும் பலரை இதுபோல் ஏமாற்றியுள்ளாதாக கூறப்படுகிறது.

The post தக்கலை அருகே பொதுமக்களை ஏமாற்றி பல லட்சம் ரூபாய் மோசடி appeared first on Dinakaran.

Tags : Takkala ,Kumarapuram ,Kingsley ,Sengodi Mudalar ,Kumari ,
× RELATED குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட கணவர் மீது வெந்நீரை ஊற்றிய மனைவி