×

அணைகளில் இருந்து 13 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்: குமரி ஆறுகளில் 4வது நாளாக கரை புரண்டு ஓடும் வெள்ளம்

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் கடந்த 11ம் தேதி நள்ளிரவில் இருந்து தொடர்ந்து இடைவிடாமல் மழை பெய்தது. இந்த மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு அதிகரித்தது. தாமிரபரணி ஆறு, வள்ளியாறு, கோதையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது. பழையாற்றிலும் பல்வேறு கிராமங்களை மூழ்கடித்து வெள்ளம் சென்றது. கரையோர கிராமங்களில் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. 200க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்ததால் வீடுகளில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். கடந்த 12ம் தேதியில் இருந்து பல்வேறு கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கின. பூதப்பாண்டி, அருமநல்லூர், தெரிசனங்கோப்பு, கடுக்கரை, நாவல்காடு, நங்காண்டி, செண்பகராமன்புதூர், தாழக்குடி, தோவாளை, கோதைகிராமம் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதே போல் சுசீந்திரம், கற்காடு, ஆஸ்ரமம், நங்கை நகர், ஆஞ்சநேயா நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் ஏராளமான குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கின. நித்திரவிளை, வைக்கல்லூர், தேங்காப்பட்டணம், முஞ்சிறை, தெருவுக்கடவு, குழித்துறை, சென்னித்தோட்டம், அருமனை, ஆறுகாணி உள்ளிட்ட கிராமங்களிலும் ஏராளமான குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கின. இந்த நிலையில் நேற்று பரவலாக மழை குறைந்தது. இதனால் வெள்ளம் மெல்ல, மெல்ல வடிய தொடங்கியது. இன்று காலை சுசீந்திரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வீடுகளை சூழ்ந்த வெள்ளம் குறைந்ததால், மக்கள் வீடுகளுக்குள் வந்தனர். விளை நிலங்களில் தொடர்ந்து தண்ணீர் தேங்கி உள்ளதால், விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர். 4வது நாளாக தண்ணீர் தேங்கி உள்ளதால் பயிர்கள் அழுகும் நிலைக்கு வந்து விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். இதற்கிடையே நேற்று மாலையில் இருந்து மலையோர பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது. இதன் காரணமாக ஆறுகளில் 4வது நாளாக வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. அணைகளுக்கான நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. மாவட்ட அணைகளில் இருந்து இன்று காலை 8 மணி நிலவரப்படி, மொத்தம் 13,328 கன அடி நீர் உபரிநீராக ஆறுகளில் திறந்து விடப்பட்டுள்ளது. இன்று காலை முதல் மீண்டும் குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் மழை பெய்ய தொடங்கி உள்ளது. நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இன்று காலை லேசான மழை இருந்தது. தேசிய பேரிடர் மீட்பு படை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக கன மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே வெள்ளம் பாதித்த பகுதிகளில் தீயணைப்பு துறை, காவல்துறையை சேர்ந்த பேரிடர் மீட்பு குழுவினர் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், அதி கனமழை எச்சரிக்கை காரணமாக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் நேற்று இரவு குமரி மாவட்டம் வந்தனர். இதில் 75 பேர் உள்ளனர். இவர்கள் நாகர்கோவில் கோணத்தில் உள்ள கல்லூரியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் மாவட்டத்தில் வெள்ளம் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்….

The post அணைகளில் இருந்து 13 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்: குமரி ஆறுகளில் 4வது நாளாக கரை புரண்டு ஓடும் வெள்ளம் appeared first on Dinakaran.

Tags : Kumari ,Nagercoil ,Dinakaran ,
× RELATED ஜூலை மாதம் வெளியாகும் ரயில் கால...