×

பொதுமக்கள் திடீர் மறியல்

 

பள்ளிபாளையம், அக்.27: பள்ளிபாளையம் தனியார் காகித ஆலையிலிருந்து, ஓடப்பள்ளி ஆயக்காட்டூர் பகுதிகளில் கரித்துகள்கள் விழுவதாகவும், இதனால் வீடுகளில் உலர வைக்கும் துணிகள், ஜன்னல் கதவுகளில் கரித்துகள்கள் படிவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், நேற்று காலை ஆலையிலிருந்து வெளியேறும் கரித்துகள்களின் அளவு அதிகமாக இருந்ததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், ஆலை நிர்வாகத்தை கண்டித்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த பள்ளிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமார், சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

பின்னர், காகித ஆலையின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். ஆலையின் புகை கூண்டிலிருந்து வெளியேறும் கரித்துகள்களின் அளவு கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது என்றும், தற்போது புதிதாக பணியில் ஈடுபட்ட தொழிலாளி, கவனக்குறைவாக செயல்பட்டதால் கட்டுப்பாட்டையும் மீறி அதிகப்படியான கரித்துகள்கள் வெளியேறி விட்டதாகவும், இனிமேல் பணியாளர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து, ஒரு மணிநேர போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர். அதன் பின்னர் வாகன போக்குவரத்து சீரானது.

The post பொதுமக்கள் திடீர் மறியல் appeared first on Dinakaran.

Tags : Pallipalayam ,Ayakatur ,Odapalli ,Dinakaran ,
× RELATED மண் பரிசோதனை முகாம்