×

பாஜ மாநில நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி மேலும் 2 வழக்கில் கைது: சென்னை போலீஸ் நடவடிக்கை

சென்னை: செஸ் உலக போட்டியின்போது தமிழ்நாடு அரசு செய்த விளம்பரத்தில் அத்துமீறி மோடியின் ஸ்டிக்கர் ஒட்டிய வழக்கு, போக்குவரத்து ஆய்வாளரிடம் தகராறு செய்த வழக்குகளில் பாஜ மாநில நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை சென்னை போலீசார் கைது செய்தனர். 44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் 2022 ஜூலை 28ம் தேதி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு செய்து இருந்தது. செஸ் ஒலிம்பியாட் போட்டியை விளம்பரப்படுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக விளம்பரம் செய்யப்பட்டது.

அந்த வகையில், சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் அருகே மாநகர பேருந்து நிறுத்தம் நிழற்குடையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விளம்பர படம் ஒட்டப்பட்டு இருந்தது. அதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்படங்கள் அருகே வேண்டும் என்றே பிரதமர் மோடியின் புகைப்படத்தை பாஜ மாநில இளைஞர் மற்றும் விளையாட்டு திறன் அணித்தலைவர் அமர் பிரசாத் ரெட்டி தலைமையில் ஒட்டப்பட்டது. அவர், சென்னை முழுவதும் உள்ள விளம்பர போஸ்டர்களில் பிரதமர் மோடியின் புகைப்படம் ஒட்ட வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு வேண்டுகொள் விடுத்து வீடியோ ஒன்று பதிவு செய்திருந்தார்.

அந்த வீடியோ அப்போது டிவிட்டரில் வைரலாக பரவியது. அதைதொடர்ந்து, தமிழ்நாடு அரசு விளம்பரத்தில் அத்துமீறி முதல்வர் புகைப்படத்தின் அருகே பிரதமர் மோடி படம் ஒட்டியதாக அப்போது கோட்டூர்புரம் போலீசார், பாஜ மாநில இளைஞர் மற்றும் விளையாட்டு திறன் அணித்தலைவர் அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்டோர் மீது 3 சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து இருந்தனர். ஆனால் யாரையும் கைது செய்யவில்லை. அதேநேரம், தமிழ்நாடு அரசு விளம்பரத்தில் ஒட்டப்பட்ட மோடியின் படத்திற்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த சசி (24), அரவிந்த் (28), சாரதி (26) ஆகியோர் கருப்பு ஸ்பிரே பெயின்ட் அடித்து பதிலுக்கு டிவிட்டரில் வீடியோ ஒன்று வெளியிட்டனர்.

அதற்கு பாஜவினர் அளித்த புகாரின் மீது அப்போது கோட்டூர்புரம் போலீசார் தபெதிகவை சேர்ந்த 3 பேர் மீதும் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையே கானத்தூர் பகுதியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் 50அடி உயர பாஜ கொடி கம்பம் அகற்ற வந்த மாநகராட்சி வாகனத்தை அடித்து உடைத்த வழக்கில் பாஜ மாநில நிர்வாகியான அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்நிலையில், சிறையில் உள்ள பாஜ நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை, ஏற்கனவே நிலுவையில் இருந்த தமிழ்நாடு அரசு விளம்பரத்தில் அத்துமீறி மோடி படம் ஒட்டிய வழக்கில் கோட்டூர்புரம் போலீசார் நேற்று கைது செய்தனர்.

அதேபோல, கடந்த 7 மாதங்களுக்கு முன் வள்ளுவர் கோட்டம் அருகில் பாஜ சார்பில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் பணியில் இருந்த போக்குவரத்து உதவி ஆய்வாளரிடம் பாஜவினர் தகராறு செய்தனர். இது தொடர்பாக 341, 353 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கிலும், அமர் பிரசாத் ரெட்டியை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். அமர்பிரசாத் ரெட்டி மேலும் 2 வழக்குகளில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post பாஜ மாநில நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி மேலும் 2 வழக்கில் கைது: சென்னை போலீஸ் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : BJP ,Amar Prasad Reddy ,Chennai ,Modi ,Tamil Nadu government ,chess ,
× RELATED தேர்தல் பணிமனையில் பாஜவினர் மோதல்: பாஜ...