×

கடற்படை மாஜி அதிகாரிகள் 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை: கத்தார் நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்தை உளவு பார்த்ததாக இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் 8 பேருக்கு கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கத்தாரில் உள்ள அல் தஹ்ரா நிறுவனத்தில் பணியாற்றி வந்த இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரிகளான கேப்டன்கள் நவ்தேஜ் சிங் கில், பிரேந்திர குமார் வர்மா, சவுரவ் வசிஷ்ட் மற்றும் கமாண்டர்கள் சுகுநாகர் பகாலா, சஞ்சீவ் குப்தா, அமித் நக்பால், புர்னேந்து திவாரி, மாலுமி ராகேஷ் கோபகுமார் ஆகியோர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அதிநவீன நீர்மூழ்கி கப்பல் திட்டத்தின் தகவல்களை இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக கத்தார் அரசு குற்றம்சாட்டியது. இதுதொடர்பான வழக்கின் விசாரணை, கத்தார் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த மார்ச் 29ம் தேதி தொடங்கியது. ஆரம்பத்தில் இருந்தே வழக்கு விசாரணைகள் ரகசியமாகவே வைக்கப்பட்டன. குற்றப்பத்திரிகையோ, குற்றச்சாட்டு குறித்த முழு விவரங்களையோ கத்தார் அரசு வெளியிடவில்லை. இந்நிலையில், வழக்கில் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வெளியிடப்பட்டது. அதில், குற்றம்சாட்டப்பட்ட 8 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

எண்ணெய் வளமிக்க கத்தார் நாட்டில் பல்வேறு துறைகளில் 7 லட்சம் இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். அந்நாட்டின் மக்கள் தொகையில் 25 சதவீதம் பேர் இந்தியர்கள் ஆவர். அப்படிப்பட்ட நிலையில், இந்த தீர்ப்பு அங்குள்ள இந்தியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த தீர்ப்புக்கு இந்திய அரசு கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘இந்த தீர்ப்பு மிகவும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. விரிவான தீர்ப்புக்காக காத்திருக்கிறோம். தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்களின் குடும்ப உறுப்பினர்கள், வழக்கறிஞர்களுடன் நாங்கள் தொடர்பில் உள்ளோம். அனைத்து சட்ட வழிகளையும் ஆராய்ந்து வருகிறோம். கத்தார் அதிகாரிகளுடன் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்துவோம். இந்த வழக்குக்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். வழக்கு நடவடிக்கைகள் ரகசியமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன’’ என கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கை பொறுத்தவரையில், 8 இந்தியர்கள் கைது செய்யப்பட்ட விவரம் ஒரு மாதம் கழித்து கடந்த ஆண்டு செப்டம்பரிலேயே இந்திய அரசுக்கு கத்தார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 1ம் தேதிதான் கத்தாருக்கான இந்திய தூதர், சிறையில் அடைக்கப்பட்ட 8 இந்தியர்களை சந்திக்க அனுமதி தரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வது குறித்து விரிவான தீர்ப்பு கிடைத்தபின்னரே இந்திய அரசு முடிவெடுக்கும் என அதிகாரிகள் கூறி உள்ளனர். குற்றச்சாட்டின் விவரம்: கத்தார் அரசு புதிய கடற்படை தளத்தை அமைக்கவும், அதிநவீன போர்க்கப்பல்களை தயாரிக்கவும் இத்தாலி நிறுவனத்துடன் கடந்த 2020ம் ஆண்டு முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது. இத்தாலியை சேர்ந்த பின்கேன்டைரி கப்பல் கட்டும் நிறுவனம் நவீன தலைமுறை நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்க உள்ளது. இந்த நீர்மூழ்கி கப்பல்கள் ரேடாரில் சிக்காமல் எதிரிகளை துவம்சம் செய்யும் திறன் கொண்டது. இந்த நீர்மூழ்கி கப்பலின் திட்டத்தைதான் 8 இந்தியர்கள் உளவு பார்த் தாக கத்தார் அரசு குற்றம்சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

The post கடற்படை மாஜி அதிகாரிகள் 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை: கத்தார் நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Indians ,Qatar Court ,New Delhi ,Navy ,
× RELATED இதை எல்லாம் மோடி பேச மாட்டார் 70 கோடி...