×

அமெரிக்கா கோரிக்கையை ஏற்று தரைவழி தாக்குதலை தள்ளி வைக்க இஸ்ரேல் ஒப்புதல்


ஜெருசலேம்: அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று தரைவழி தாக்குதலை தள்ளி வைக்க இஸ்ரேல் ஒப்பு கொண்டுள்ளது. பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் படையினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையேயான போர் இன்று 20வது நாளை எட்டியது. கடந்த இரு தினங்களாக காசா பகுதியை முற்றுகையிட்டு, இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த 23ம் தேதி இரவு 400க்கும் மேற்பட்ட இலக்குகளை இஸ்ரேல் போர் விமானங்கள் தகர்த்த நிலையில் 704 பேரும், நேற்று முன்தினம் இரவு நடத்தப்பட்ட தீவிர வான்வழி தாக்குதலில் 756 பேரும் பலியாகினர். இதுவரை காசாவில் பலியோனார் எண்ணிக்கை 6,546 ஆக அதிகரித்துள்ளது. போரில் காயமடைந்த பலர், மருத்துவமனைக்கு வரும் நிலையில், அங்கு எரிபொருள், மருந்துகள் இல்லாமல் டாக்டர்கள் செய்வதறியாது தவிக்கின்றனர்.

பல மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் இன்றி காயமடைந்தவர்கள் வெறும் தரையில் படுக்க வைக்கப்பட்டுள்ளனர். அறுவை சிகிச்சைக்காக மருந்துகள், உபகரணங்கள் இல்லாமல் பலர் உயிருக்கு போராடி வருகின்றனர். 50,000 கர்ப்பிணிகள் நிலை இரட்டிப்பு போராட்டமாக இருப்பதாக மருத்துவ தன்னார்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மருத்துவ சேவையே முற்றிலும் முடங்கியிருப்பதால் உடனடியாக காசாவிற்கு எரிபொருள் கொண்டு வரப்படுவது அவசியம் என ஐநா வலியுறுத்தி உள்ளது. காசாவில் மொத்தமுள்ள 23 லட்சம் மக்களில் 14 லட்சம் பேர் உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்துள்ளனர். 6 லட்சம் பேர் வரையிலும் ஐநா தங்குமிடங்களில் குவிந்துள்ளனர். தங்குமிடங்களில் 4 மடங்கு அதிக கூட்டம் நிரம்பி வழிவதால் பலரும் தெருக்களில் வசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. மற்றொரு அண்டை நாடான சிரியா மீதும் இஸ்ரேல் விமானங்கள் குண்டு மழை பொழிந்துள்ளன. சிரியா பகுதியிலிருந்து நேற்று இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது. இஸ்ரேல் நடத்தி வரும் போர் காசாவை தாண்டி பரவும் என்ற அச்சங்கள் உள்ள நிலையில் அதை உறுதிப்படுத்தும் வகையில் லெபனான், சிரியாவில் நடக்கும் தாக்குதல்கள் பார்க்கப்படுகின்றன. இஸ்ரேலின் தாக்குதல் தொடரும் நிலையில் அதற்கு எதிரான அமைப்பின் தலைவர்கள் லெபனானின் பெய்ரூட்டில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ருல்லா, ஹமாஸ் துணைத்தலைவர் சலே அல் அரவுரி, பாலஸ்தீன ஜிகாத் தலைவர் ஜியாத் அல் நகாலா ஆகியோர் இப்பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளனர்.

இதற்கிடையே இஸ்ரேலுக்கு ஆதரவாக போர்க்கப்பல்களை தொடர்ந்து அதிநவீன எப்-16 விமானங்களையும் அமெரிக்கா தற்போது அனுப்பியுள்ளது. சிரியாவின் அலப்போ விமான நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் போன்ற நாடுகளில் இருந்து சிரியா விமான நிலையங்களுக்கு வெடி பொருட்கள் கொண்டு வரப்படுகிறது என்ற அடிப்படையில் இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த போர் நடவடிக்கை குறித்து ஜோர்டான் ராணி ரானியா அல் அப்துல்லா கண்டனம் தெரிவித்தார். இதற்கிடையில், மேற்கு ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்க ராணுவ நிலைகளை வான்வழி தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை செய்யும் வரை காசாவுக்குள் படையினரை அனுப்ப வேண்டாம் என்று அந்த நாடு கேட்டு கொண்டது.

இதையடுத்து, தரைவழி தாக்குதலை இஸ்ரேல் தள்ளி வைத்துள்ளது. இதுகுறித்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அதிகாரிகளை மேற்கோள் காட்டி ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், ‘ஈராக், சிரியா, குவைத், ஜோர்டான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய மேற்கு ஆசிய நாடுகளில் அமெரிக்க ராணுவ நிலைகள் அமைந்துள்ளன. அங்கு ஏராளமான அமெரிக்க ராணுவத்தினர் உள்ளனர். இந்நிலையில், காசா பகுதியில் இஸ்ரேல் தரைவழி தாக்குதலை தொடங்குவதற்கு முன்னதாக, அந்த பிராந்தியத்திலுள்ள தனது ராணுவ நிலைகளுக்கு வான்பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது. காசா தரைவழி தாக்குதலின் எதிரொலியாக மேற்காசியாவில் உள்ள தங்கள் ராணுவ நிலைகளின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டால், அந்த ஏவுகணைகளை இடைமறித்து அழிப்பதற்கான தளவாடங்களை அந்த பிராந்தியத்தில் நிறுவ அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

அந்த பணிகள் நிறைவடையும் தரைவழித் தாக்குதலை நிறுத்திவைக்க வேண்டும் என்று இஸ்ரேலை அமெரிக்கா கேட்டு கொண்டது. அதற்கு இஸ்ரேலும் ஒப்பு கொண்டுள்ளது. இஸ்ரேலின் இந்த முடிவுக்கு அமெரிக்காவின் கோரிக்கை மட்டும் காரணமில்லை. காசாவில் உள்ள பொதுமக்களுக்கு நிவாரண பொருள்களை கொண்டு செல்வதற்காக சர்வதேச நாடுகள் மேற்கொண்டு வரும் முயற்சிகள், ஹமாஸ் அமைப்பினரால் கடத்தி செல்லப்பட்ட பிணை கைதிகளை விடுவிப்பதற்காக ராஜீய ரீதியில் நடைபெற்று வரும் முயற்சிகள் ஆகியவையும் தரைவழி தாக்குதலை தற்போதைக்கு நிறுத்திவைக்க இஸ்ரேல் முடிவு செய்துள்ளதற்கான காரணங்கள் ஆகும் என்றும் தெரிகிறது.

காசாவில் நிரம்பி வழியும் மயானங்கள்
இஸ்ரேலின் தாக்குதலில் மக்கள் கொத்து கொத்தாக கொன்று குவிக்கப்பட்டு வரும் நிலையில் இறந்தவர்களின் உடலை புதைக்க இடம் இல்லாமல் மயானங்கள் நிரம்பி வழிகின்றன. இது ஒருபுறம் இருக்க காயமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மணி நேரத்துக்கும் நூற்றுக்கணக்கில் அதிகரித்து வருகிறது. அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியாமல் காசாவில் இருக்கும் மருத்துவமனைகள் திணறி வருகின்றன. மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு, மின்தடை போன்ற காரணங்களால் காசாவில் 3ல் ஒரு மருத்துவமனை முற்றிலுமாக செயல்படுவதை நிறுத்திவிட்டதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

The post அமெரிக்கா கோரிக்கையை ஏற்று தரைவழி தாக்குதலை தள்ளி வைக்க இஸ்ரேல் ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : Israel ,US ,JERUSALEM ,Palestine ,Gaza Strip ,America ,Dinakaran ,
× RELATED இஸ்ரேல்-ஹமாஸ் போரில் 29000 பாலஸ்தீனியர்கள் பலி