×

திருவேற்காடு நகராட்சி ஆணையரை கண்டித்து நகராட்சி அலுவலகத்தில் கழிவுநீர் கொட்டி பொதுமக்கள் போராட்டம்


பூந்தமல்லி: திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட 10வது வார்டு பகுதியில், கழிவுநீர் கால்வாய், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதி எதுவும் செய்யப்படவில்லை. கால்வாய் சுத்தப்படுத்தாமல் இருப்பதால் கழிவுநீர் தேங்கி அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் கால்வாயில் கொசு உற்பத்தியாகி டெங்கு, மலேரியா காய்ச்சல் பரவும் அபாயம் இருப்பதாகவும் குற்றம்சாட்டுகின்றனர். நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷாவிடம் இதுகுறித்து பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், இன்று காலை திருவேற்காடு நகராட்சி அலுவலகத்திற்கு வந்து, ஆணையர் ஜஹாங்கீர் பாஷாவை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது, 4 குடங்களில் கொண்டு வந்த கழிவுநீரை நகராட்சி அலுவலக வாசலில் ஊற்றி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நகராட்சி வளாகம் முழுவதும் சாக்கடை கழிவுநீரால் துர்நாற்றம் வீசியது. தகவலறிந்து திருவேற்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மக்கள் பிரதிநிதிகள் மற்றும் நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா இடையே போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, நகராட்சி ஆணையரை கண்டித்து பொதுமக்கள் முழக்கமிட்டனர். இதையடுத்து நகராட்சி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். நகராட்சி ஆணையரை கண்டித்தும் அவரை பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தியும் திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் கழிவு நீரை கொட்டி முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

The post திருவேற்காடு நகராட்சி ஆணையரை கண்டித்து நகராட்சி அலுவலகத்தில் கழிவுநீர் கொட்டி பொதுமக்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Thiruvekadu ,Poontamalli ,Tiruvekadu ,
× RELATED அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு: கற்பழித்து கொலையா? என விசாரணை