×

பாரா ஆசிய விளையாட்டு போட்டி இந்தியா பதக்க வேட்டை: ஈட்டி எறிதலில் சுமித் சாதனை

ஹாங்சோ: மாற்றுத்திறனாளிகளுக்கான ‘பாரா’ ஆசிய விளையாட்டுப் போட்டித் தொடரில் இந்தியா பதக்க வேட்டையாடி அசத்தி வருகிறது. ஆண்கள் ஈட்டி எறிதலில் சுமித் அன்டில் தங்கப் பதக்கம் வென்று புதிய சாதனை படைத்தார். சீனாவின் ஹாங்சோ நகரில் நடந்து வரும் இந்த தொடரின் 7வது நாளான நேற்று, ஆண்கள் ஈட்டி எறிதல் (எப்64) பிரிவில் இந்திய வீரர் சுமித் அன்டில் 73.29 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை எறிந்து தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார். இலங்கை வீரர் அரச்சிகே 64.09 மீட்டரும், மற்றொரு இந்திய வீரர் புஷ்பேந்திர சிங் 62.09 மீட்டரும் எறிந்து முறையே வெள்ளி, வெண்கலம் வென்றனர்.

இந்த போட்டியில் இந்திய வீரர் சுமித் உலக சாதனை, ‘பாரா’ ஆசிய சாதனை மற்றும் ஆசிய சாதனைகளை முறியடித்து மகத்தான சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு 2019ம் ஆண்டு இந்திய வீரர் சந்தீப் 66.18 மீட்டர் எறிந்ததே உலக சாதனையாக இருந்தது. இந்த முறை சந்தீப் 4வது இடத்தையே பிடிக்க முடிந்தது. ஈட்டி எறிதலில் இன்னொரு இந்திய வீரரான ஹானியும் தங்கம் வென்று அசத்தியுள்ளார். அவர் ஈட்டி எறிதல் (எப்37/எப்38) பிரிவில் 55.97 மீட்டர் தொலைவுக்கு எறிந்து முதல் இடம் பிடித்தார். இது ஆசிய விளையாட்டுப் போட்டியின் இந்த பிரிவில் புதிய சாதனையாகும். இதற்கு முன்பு சீன வீரர் 52.52 மீட்டர் எறிந்ததே ஆசிய ‘பாரா’ சாதனையாக இருந்தது. இந்தப் பிரிவில் சீனா, ஈரான் வீரர்கள் 2வது, 3வது இடங்களை பிடித்தனர். இந்தியா இதுவரை 10 தங்கம், 12 வெள்ளி, 14 வெண்கலம் என மொத்தம் 36 பதக்கங்களை வென்று 5வது இடத்தில் உள்ளது வில்வித்தை

* வெண்கலப் பதக்கத்துக்கான ஆடவர் இரட்டையர் பிரிவு ரீகர்வ் வில்வித்தைப் போட்டியில் இந்திய வீரர்கள் ஹன்ரெய்சாய் நேத்சிரி, போன்சாய் பிம்தாங் இணை 6-0 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது.

* மகளிர் இரட்டையர் காம்பவுண்ட் பிரிவு பைனலில் இந்திய வீராங்கனைகள் ஷீத்தல் தேவி, சரிதா இணை 150-152 என்ற புள்ளிக் கணக்கில் தோற்றாலும் 2வது இடம் பிடித்து வெள்ளியை கைப்பற்றினர். சீனா தங்கம், ஈரான் வெண்கலம் வென்றன.

* ஆடவர் இரட்டையர் காம்பவுண்ட் பிரிவு வில்வித்தையிலும் இந்தியாவின் ராகேஷ் குமார், சுராஜ் சிங் இணை 150-155 என்ற புள்ளிக் கணக்கில் சீனாவிடம் வெற்றி வாய்ப்பை இழந்தது. சீனா, இந்தியா, சீன தைபே அணிகள் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றன. தடகளம்

* வட்டு எறிதல் மகளிருக்கான எப்54/எப்55 பிரிவில் பூஜா வெள்ளிப் பதக்கம் வென்றார். சீன வீராங்கனைகள் தங்கம், வெண்கலம் வென்றனர்.

* ஆடவர் 200 மீட்டர்(டி35) ஓட்டத்தில் இந்தியாவின் நாராயண் தாகூர் வெண்கலம் வென்றார். டி37பிரிவு 200 மீட்டர் ஓட்டத்தில் மற்றொரு இந்திய வீரரான ஷ்ரேயானஷ் திரிவேதியும் வெண்கலம் பெற்றார்.

* ஆடவர் குண்டு எறிதல் எப்57 பிரிவில் இந்திய வீரர்கள் சோமன் ரானா, செமா ஹோகடோ ஆகியோர் முறையே வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர். ஈரான் வீரர் யாசின் தங்கம் வென்றார்.

* ஆடவர் ஈட்டி எறிதல் (எப் 46) பிரிவில் இந்திய வீரர்கள் குர்ஜார் சுந்தர் சிங், ரிங்கு, அஜித் சிங் ஆகிய மூவரும் முறையே 68.6, 67.08, 63.58 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை எறிந்தனர். அதனால் முதல் 3 இடங்களை வென்றதுடன் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 பதக்கங்களையும் கைப்பற்றினர். கூடவே குர்ஜார் புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.

The post பாரா ஆசிய விளையாட்டு போட்டி இந்தியா பதக்க வேட்டை: ஈட்டி எறிதலில் சுமித் சாதனை appeared first on Dinakaran.

Tags : Para Asian Games India ,Sumith ,Hangzhou ,India ,Para' Asian Games ,Sumit ,Dinakaran ,
× RELATED சீன ஆசிய பாரா விளையாட்டில் பதக்கம்...