×

அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல் உபயதாரர் நிதி மூலம் கோயில்களில் ரூ.800 கோடி மதிப்பீட்டில் பணிகள்

சென்னை: சென்னை கோயம்பேடு, குறுங்காலீஸ்வரர் மற்றும் வைகுண்டவாசப் பெருமாள் கோயிலில் ரூ.53.90 லட்சம் மதிப்பீட்டில் புதிய மரத்தேர் உருவாக்கும் பணி, ரூ.85.40 லட்சம் மதிப்பீட்டிலான ஐந்து நிலை ராஜகோபுரம் மற்றும் ரூ. 49 லட்சம் மதிப்பீட்டிலான அன்னதானக் கூடம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: இந்த ஆட்சி காலத்தில் தான் அதிகமான அளவிற்கு உபயதாரர்கள் பணிகள் செய்ய முன் வருகிறார்கள். உபயதாரர்கள் மூலம் இதுவரை ரூ.800 கோடி அளவிற்கு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதில் சட்டமன்ற அறிவிப்பு பணிகளுக்கு ரூ.600 கோடியிலும், அறிவிப்பில்லாத பணிகளுக்கு ரூ.200 கோடியிலும் பணிகள் நடைபெறுகின்றன. இத்தொகை முழுமையாக அவர்களின் எண்ணத்திற்கேற்றார்போல் செலவிடப்படும் என்ற இந்த அரசின் மீதான நம்பிக்கையே அதற்கு காரணம்.

இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 1,093 கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றிருக்கின்றது. கோயில்களுக்கு சொந்தமான ரூ.5472 கோடி மதிப்பிலான 5,820 ஏக்கர் நிலங்கள் இதுவரை மீட்கப்பட்டிருக்கின்றன. அறநிலையத்துறை வரலாற்றிலேயே குடமுழுக்கு பணிகள் என்றாலும், நில மீட்பு பணிகள் என்றாலும் இந்த ஆட்சியில் செய்தது போல் இதற்கு முன் நடைபெற்றது இல்லை என பக்தர்கள் முழு மகிழ்ச்சியோடு வரவேற்றுக் கொண்டிருக்கின்றார்கள். கோயிலின் நிதி மற்றும் உபயதாரர்கள் நிதியின் மூலம் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் அனைத்தும் முழுமையடைகின்ற போது இந்த ஆட்சியை பாராட்டாதவர்களே இருக்கமாட்டார்கள். அந்த அளவிற்கு எங்களின் செயல்பாடுகள் அமையும்.

மயிலாப்பூர், கபாலீசுவரர் கோயில் நிதியின் மூலம் ரூ.29 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் புதிய கலாச்சார மையம் குறித்து கூறப்படும் குற்றச்சாட்டு தவறானது. இது முழுமையாக பக்தர்களின் பயன்பாட்டிற்காக அக்கோயிலின் அறங்காவலர்களின் ஒப்புதலுடன் நமது கலை, கலாச்சாரம், பண்பாட்டை காக்கும் வகையில் அமைக்கப்படுகிறது. கோயிலின் நிதியை அப்படியே வைத்திருப்பதால் என்ன பலன் கிடைக்க போகின்றது. அதனை கொண்டு பக்தர்களின் மேம்பாட்டிற்காக செலவிடுவது குற்றமாகாது. ஆகவே சட்டத்திற்கு உட்பட்டு, அறங்காவலர் குழுவின் ஒப்புதலோடு அந்த நிதியை கலாச்சார மையத்திற்கு பயன்படுத்த இருக்கின்றார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் விருகம்பாக்கம் எம்எல்ஏ பிரபாகர்ராஜா, இணை ஆணையர் ரேணுகாதேவி, கவுன்சிலர் லோகு, செயல் அலுவலர் கேசவராஜன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல் உபயதாரர் நிதி மூலம் கோயில்களில் ரூ.800 கோடி மதிப்பீட்டில் பணிகள் appeared first on Dinakaran.

Tags : Minister ,PK Shekharbabu ,CHENNAI ,Chennai Koyambedu ,Kurungaleeswarar ,Vaikundavasap Perumal Temples ,P.K.Sekharbabu ,
× RELATED வாயால் மட்டுமே வடை சுட்டுக்கொண்டு...