×

தேர்தலுக்கு முன்பே தொடங்கிய கோஷ்டி பூசல் ம.பியில் 4 காங்கிரஸ் வேட்பாளர்கள் அதிரடி மாற்றம்: கட்சி தலைமை அறிவிப்பு

போபால்: 4 தொகுதிக்கு காங்கிரஸ் தலைமை அறிவித்த வேட்பாளர்களுக்கு தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், மத்தியபிரதேசத்தில் 4 காங்கிரஸ் வேட்பாளர்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். மத்தியபிரதேசத்தில் கடந்த 2018ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜவின் 15 ஆண்டுகால ஆட்சியை அகற்றி விட்டு, காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. கமல்நாத் முதல்வராக பதவியேற்றார். ஆனால் உள்கட்சி பூசல் காரணமாக ஜோதிராதித்ய சிந்தியா தனது ஆதரவாளர்கள் 22 பேருடன் காங்கிரசில் இருந்து விலகி பாஜவில் இணைந்தனர்.

இதையடுத்து பாஜ மீண்டும் ஆட்சியமைக்க சிவ்ராஜ் சிங் சவுகான் முதல்வராக பதவியேற்றார். அவரது பதவிக்காலம் முடிவடைய உள்ளதையடுத்து மத்தியபிரதேசத்தின் 230 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் நவம்பர் 17ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து 229 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் அண்மையில் வௌியிட்டது. அதில் 85 பேர் அடங்கிய 2வது பட்டியலில் ஏற்கனவே 3 வேட்பாளர்கள் மாற்றப்பட்ட நிலையில் தற்போது மேலும் சுமவாலி, பிபரியா(தனி), பட்நகர் மற்றும் ஜரோ ஆகிய 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை கட்சி தலைமை மாற்றி உள்ளது. 2020ல் நடந்த இடைதேர்தலில் மொரனா மாவட்டத்தில் உள்ள சுமவாலி தொகுதியில் அஜய் குஷ்வாஹா போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறை அவருக்கு பதிலாக குல்தீப் சிகார்வாருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

இதை எதிர்த்து அஜய் குஷ்வாஹா தன் ஆதரவாளர்களுடன் போராட்டம் நடத்தினார். இதையடுத்து அஜய் குஷ்வாஹா மீண்டும் சுமவாலி தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார். இதேபோல் பட்நகர் தொகுதியில் ராஜேந்திர சிங் சோலங்கிக்கு வாய்ப்பு வழங்கியதை கண்டித்து முரளி மோர்வாலின் ஆதரவாளர்கள் மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத் வீட்டின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதைதொடர்ந்து முரளி மோர்வால் பட்நகர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ரத்லம் மாவட்டத்தின் ஜாரா தொகுதியில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஹிம்மத் மாலிக்கு பதில் வீரேந்திர சோலங்கியும், நர்மதாபுரம் மாவட்டம் பிபரியா தொகுதியில் குரு சரண் கரேவுக்கு பதில் வீரேந்திர பெலவன்ஷியும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

The post தேர்தலுக்கு முன்பே தொடங்கிய கோஷ்டி பூசல் ம.பியில் 4 காங்கிரஸ் வேட்பாளர்கள் அதிரடி மாற்றம்: கட்சி தலைமை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Congress ,Bhopal ,Madhya Pradesh ,
× RELATED முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி பாஜவில் இணைந்தார்