×

குலசேகரன்பட்டினம் கடற்கரையில் மகிஷாசூரனை சம்ஹாரம் செய்த முத்தாரம்மன்: லட்சக்கணக்கானோர் தரிசனம்

உடன்குடி: குலசேகரன்பட்டினம் கடற்கரையில் பக்தர்களின் கோஷம் விண்ணதிர மகிஷாசூரனை முத்தாரம்மன் சம்ஹாரம் செய்தார். இதை லட்சக்கணக்கானோர் தரிசித்தனர். தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான தசரா திருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி விரதமிருந்து வேடமணியும் பக்தர்கள் காப்பு கட்டினர். திருவிழாவில் 10 நாட்களும் இரவில் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் வீதியுலா வந்து காட்சியளித்தார். 10ம் திருவிழாவான நேற்று முன்தினம் காலையில் அம்மனுக்கு மகா அபிஷேகம், இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரத்திற்கு சிம்ம வாகனத்தில் முத்தாரம்மன், கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோயில் முன் எழுந்தருளினார். அப்போது அபிஷேக மண்டபத்தில் இருந்து மகிஷாசூரனும் புறப்பட்டு கடற்கரை வளாகத்திற்கு வந்தார். தன் தலையுடன் வந்த சூரனை முத்தாரம்மன் ஈட்டியால் வதம் செய்தார். 12.08க்கு சூரனின் சிம்ம தலையையும் 12.16க்கு எருமை தலையையும், தொடர்ந்து 12.24 மணிக்கு சேவல் தலையையும் வதம் செய்தார். அப்போது அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ஓம்காளி, ஜெய்காளி என்று விண்ணதிர பக்தி பரவசத்துடன் கோஷம் எழுப்பி முத்தாரம்மனை வழிபட்டனர்.

சூரசம்ஹாரம் முடிந்தவுடன் நேற்று அதிகாலை 1 மணியளவில் கடற்கரை மேடையில் அம்மன் எழுந்தருளியதும் அபிஷேக ஆராதனை நடந்தது. 2 மணிக்கு அம்மனுக்கு சிதம்பரேஸ்வரர் கோயிலுக்கு முன்பு சாந்தாபிஷேக ஆராதனையும், தொடர்ந்து திருத்தேரில் பவனி வந்து தேர் நிலையம் சென்றடைதலும் நடந்தது. காலை 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் அம்பிகை வீதியுலா புறப்பாடும், மாலை 4 மணிக்கு அம்மன் திருக்கோயிலை வந்து சேர்தலும், மாலை 4.30 மணிக்கு காப்பு களைதலும் நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளானோர் பங்கேற்றனர். 12ம் திருவிழாவான இன்று அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, பாலாபிஷேகம் நடக்கிறது. திருவிழாவையொட்டி நாகர்கோவில், நெல்லை, சாத்தான்குளம், தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களிலும் பக்தர்கள் குவிந்திருந்தனர்.

The post குலசேகரன்பட்டினம் கடற்கரையில் மகிஷாசூரனை சம்ஹாரம் செய்த முத்தாரம்மன்: லட்சக்கணக்கானோர் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Mutharamman ,Mahishasura ,Kulasekaranpattinam beach ,Ebengudi ,Samharam ,Thoothukudi district ,Muttharaman ,Mahishasuran ,Kulasekaranpatnam beach ,
× RELATED திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு...