×

திருச்சி கோட்டத்தில் 1ம் தேதி முதல் 4 ரயில்கள் மெமு ரயில்களாக மாற்றம்: நாகையில் பராமரிப்பு நிலையம் அமைக்கப்படுமா?


நாகை: தென்னக ரயில்வே திருச்சி கோட்டத்தில் வரும் 1ம் தேதி முதல் 4 டெமு ரயில்கள் மெமு ரயில்களாக மாற்றப்படுகிறது. தென்னக ரயில்வே திருச்சி கோட்டத்தில் அனைத்து ரயில் பாதைகளும் மின் மயமாக்கப்பட்டுள்ளது. இதனால் நீண்ட தூரம் இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும் டீசல் இன்ஜினில் இருந்து மாற்றப்பட்டு மின் இன்ஜினில் இயங்கி வருகிறது. ஆனால் குறுகிய தூரம் இயக்கப்படும் ரயில்கள் பெரும்பாலும் டெமு அதாவது டீசல் மூலம் இயங்கும் ரயில்களாவே உள்ளது. இதனால் ரயில்வே நிர்வாகத்திற்கு டீசல் செலவு அதிகமாகி வருகிறது. இதை கருத்தில் கொண்டு குறுகிய தூரத்தில் இயக்கப்படும் டெமு ரயில்கள் அனைத்தும் மெமு அதாவது மின்சார ரயிலாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக தென்னக ரயில்வே திருச்சி கோட்டம் முதற்கட்டமாக திருச்சியில் இருந்து பாலக்காடு வரை இயங்கும் ரயில், திருச்சியில் இருந்து வேளாங்கண்ணி வரை இயங்கும் ரயில், நாகையில் இருந்து வேளாங்கண்ணி வரை இயங்கும் ரயில், நாகையில் இருந்து காரைக்கால் வரை இயங்கும் ரயில்கள் என 4 ரயில்கள் டெமுவில் இருந்து மெமுவாக மாற்றப்படுகிறது. இந்த ரயில்கள் இதுவரை டீசல் மூலம் இயங்கி வருகிறது. வரும் 1ம் தேதி முதல் மின்சாரம் வாயிலாக இயங்கவுள்ளது. மின்சாரம் மூலம் இயக்கப்படுவதால் ரயில்கள் ஒரு குறிப்பிட்ட ஸ்டேஷனில் நிறுத்தி எடுப்பதற்கு வசதியாக இருப்பதுடன் டீசல் செலவுடன் ஒப்பிடும்போது மின்சார செலவு குறையும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அதே நேரத்தில் தென்னக ரயில்வே திருச்சி கோட்டத்தில் டெமு ரயில் பராமரிப்பு நிலையம் உள்ளது. ஆனால் மெமு ரயில் பராமரிப்பு நிலையம் இல்லை. மதுரை கோட்டத்தில் டெமு மற்றும் மெமு என இரண்டு பராமரிப்பு நிலையமும் இல்லை. ஆனால் கேரளா மாநிலம் பாலக்காடு, திருவனந்தபுரத்தில் மெமு ரயில் பராமரிப்பு நிலையம் உள்ளது. தற்போது திருச்சி கோட்டத்தில் மெமு ரயில் பழுது ஏற்பட்டால் பாலக்காடு பராமரிப்பு நிலையத்தில் தான் சரி செய்யப்படுகிறது. திருச்சி அருகே மஞ்சத்திடலில் மெமு ரயில் பராமரிப்பு முனையம் உருவாக்க தென்னக ரயில்வே திட்டமிட்டுள்ளது. ஆனால் இன்னும் பணிகள் துவங்கவில்லை. திருச்சி கோட்டத்தில் அனைத்து ரயில்களும் மெமுவாக மாற்றப்படுவதற்குள் இந்த பராமரிப்பு முனையம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து நாகூர் நாகப்பட்டினம் ரயில் உபயோகிப்பாளர் சங்க தலைவர் மோகன் கூறியதாவது: பெரும்பாலான ரயில்கள் டெமுவில் இருந்து மெமுவாக மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் வேளாங்கண்ணியில் இருந்து திருவாரூர், பட்டுக்கோட்டை, காரைக்குடி வழியாக வாரம் இருமுறை செல்லும் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் டெமுவாகவே இயக்கப்படவுள்ளது. இதற்கு காரணம் திருவாரூரில் இருந்து காரைக்குடி வரையிலான பாதை மின்மயமாக்கப்படவில்லை. திருச்சி கோட்டத்தில் அனைத்து ரயில்களும் மெமுவாக மாற்றம் செய்வதால் ரயில்வே நிர்வாகத்துக்கு டீசல் செலவு குறைவதுடன் சுற்றுச்சூழல் பாதிப்பு குறையும். பயணிகள் விரைவாக தங்களது இடத்தை அடைய முடியும். ஆனால் மெமு பராமரிப்பு நிலையம் திருச்சி, மதுரை கோட்டத்தில் இல்லை. பராமரிப்புக்காக பாலக்காடு தான் செல்ல வேண்டும்.

எனவே நாகையில் மெமு பராமரிப்பு நிலையத்தை ஏற்படுத்த வேண்டும். நாகையில் பல ஆண்டுக்கு முன்பு இருந்த ரயில்வே பராமரிப்பு நிலையம் தான் திருச்சி பொன்மலைக்கு மாற்றம் செய்யப்பட்டது. நாகையில் ரயில்வே நிர்வாகத்துக்கு போதுமான இடம் உள்ளதால் மெமு பராமரிப்பு நிலையத்தை துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

The post திருச்சி கோட்டத்தில் 1ம் தேதி முதல் 4 ரயில்கள் மெமு ரயில்களாக மாற்றம்: நாகையில் பராமரிப்பு நிலையம் அமைக்கப்படுமா? appeared first on Dinakaran.

Tags : MEMU ,Trichy ,Nagai ,Southern Railway ,Trichy section ,Dinakaran ,
× RELATED எல்லைத் தாண்டி வந்ததாக இலங்கை...