×

பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் மானாவாரி பயிர் சாகுபடி துவக்கம்: சொட்டுநீர் மூலம் காய்கறி உற்பத்தி


பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் மானாவாரி பயிர் சாகுபடி துவங்கப்பட்டுள்ளது. காய்கறி பயிர்கள் கருகாமல் இருக்க சொட்டு நீர் பாசனமுறையை பயன்படுத்தி தண்ணீர் பாய்ச்சுவதை விவசாயிகள் தீவிரமாகியுள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில், தென்னைக்கு அடுத்தப்படியாக பல்வேறு காய்கறிகள் மற்றும் மானாவாரி பயிர்கள் பயிரிடப்படுகிறது. அதிலும், வெண்டை, புடலங்காய், கத்தரி, பச்சைமிளகாய், தக்காளி, பூசணி உள்ளிட்ட பல்வேறு காய்கறி சாகுபடியில் விவசாயிகள் அதிகளவில் ஈடுபடுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பருவமழையை எதிர்நோக்கி அதற்கேற்ப காய்கறி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.

தென்மேற்கு பருவமழை காலத்தில் சாகுபடி செய்யப்பட்ட தக்காளி, பூசணி, கத்தரிக்காய், வெண்டைக்காய், பீர்க்கங்காய், புடலங்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளின் அறுவடை கடந்த மாதம் முடிவடைந்தது. இதையடுத்து, வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கி அறுவடை செய்யப்பட்ட விளை நிலங்களை மீண்டும் உழவு பணி மேற்கொண்டு காய்கறி சாகுபடியில் ஈடுபட துவங்கியுள்ளனர். தற்போது மழை குறைந்து வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளது. இருப்பினும், மண்ணின் ஈரப்பதம் மிகவும் குறைவான இடங்களில், விவசாயிகள் பலர் தங்கள் விளை நிலங்களில், கிணற்று பாசனம் மூலம் தண்ணீரை இறைத்து நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதை தொடர்ந்துள்ளனர்.

இதில் பல விவசாயிகள், மானாவாரி பயிர் மற்றும் காய்கறி சாகுபடியை துவங்கியுள்ளதால், அவை கருகாமலும், வாடாமலும் இருக்க, சொட்டு நீர் பாசனமுறையை ஏற்படுத்தி தண்ணீர் பாய்ச்சுவதை தீவிரமாக்கி உள்ளனர். வடகிழக்கு பருவமழை பொய்த்தால், அடுத்து கோடை மழைதான் என்றாலும், அதுவரை காய்காறி சாகுபடியை தொடர்ந்து மேற்கொள்ள, தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க சொட்டு நீர் பாசனத்தை கையாள்வதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

The post பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் மானாவாரி பயிர் சாகுபடி துவக்கம்: சொட்டுநீர் மூலம் காய்கறி உற்பத்தி appeared first on Dinakaran.

Tags : Pollachi District ,Pollachi ,Drip Water ,Dinakaran ,
× RELATED பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில்...