×

துக்கங்கள் களையும் துர்க்கையின் தோற்றங்கள்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

விந்தியமலையின் கர்வத்தை அடக்க அகத்தியர் வழிபட்டவள் வனதுர்க்கை. பக்தரின் ராகு தோஷத்தை நீக்குபவள். திரிபுரசம்ஹாரம் செய்ய ஈசனுக்குத் துணையாக நின்றவள் சூலினி துர்க்கை. அனைவரின் துயரங்களையும் அழிக்கவல்லவள்.பரமசிவனின் நெற்றிக்கண்ணிலிருந்து எழுந்த அக்னிப் பிழம்பை கங்கையில் கொண்டு சேர்த்தவள் ஜாதவேதோ துர்க்கை. அந்தப் பிழம்பே முருகன். நாடுவோர் வாழ்வில் ஒளி அருள்பவள்.

தட்சயாகத்தால் ஈசனுக்கு ஏற்பட்ட கோபத்தைத் தணித்தவள் சாந்தி துர்க்கை. கடன், நோய், தீய சக்திகளின் தொல்லைகளை நீக்கும் தேவி இவள்.ஈசனுடன் வேடுவச்சியாக எழுந்தருளிய தேவி சபரீ துர்க்கை. பக்தரின் வேண்டுதல்களை எளிதாகவும், இனிமையாகவும்நிறைவேற்றும் அன்னை.பண்டாசுரனோடு போரிட்ட லலிதாம்பிகைக்கு, தீ ஜ்வாலையாகத் துணை நின்றவள் ஜ்வாலா துர்க்கை. அனைவரின் துன்பங்களையும் எரித்து அழிப்பவள்.லவணாசுரனை வதம் செய்ய ராம-லட்சுமணருக்கு உபதேசம் அருளியவள் லவண துர்க்கை. தண்ணீரில் உப்பு கரைவது போல் தேவியின் உபாசனையில் தன்னைக் கரைத்துக் கொள்ளும் ஆத்ம ஞானம் அருள்பவள்.

யோகிகளுக்கும், பக்தர்களுக்கும் அறியாமை இருளை நீக்கி ஞான தீபம் ஏற்றுபவள் தீப துர்க்கை. சத் சித் ஆனந்தம் மூன்றையும் அருள்பவள்.அமிர்தத்தை பங்கிட்ட மோஹினி மேல், அசுரர்களை மயக்கம் கொள்ளச் செய்தவள் ஆஸூரி துர்க்கை. மோக துன்பத்தை அழிப்பவள்.காளை வாகனம், இரு கரங்களிலும் சூலமும், தாமரையும். எப்போதும் ஆனந்த தோற்றம் – சைல புத்ரி. வாழ்வில் ஆனந்தம் பூக்க வைப்பவள்.

வெண்ணிற ஆடை, வலக்கையில் ஜபமாலை, இடக்கையில் கமண்டலம், தாமரை மலராலான அணிகலன் சகிதம் தோன்றுபவள், பிரம்மச்சாரிணி. தவ சீலர்களுக்கு உறுதுணையாய் இருப்பவள். தங்கநிற உடல், முக்கண்கள், பத்து கரங்களிலும் ஆயுதங்கள், புலி வாகனம் என அருட்கோலம் காட்டும் துர்க்கை சந்த்ரகண்டா. தீவினைகளைத் தூள் தூளாக்குபவள். சூரியமண்டலத்தில் வாசம் செய்து, புன்சிரிப்பாலேயே உலகை சிருஷ்டிக்கும் துர்க்கை கூஷ்மாண்டா. கூஷ்மாண்டம் என்ற பூசணிக்காயை இத்தேவிக்கு அர்ப்பணித்தால் நலம் பல விளைவிப்பாள்.

இரு கரங்களிலும் தாமரை மலர்கள், ஒரு கரத்தால் கந்தனை அணைத்து மறு கரத்தால் வரத முத்திரை தரித்து சிங்கத்தின் மீது ஆரோகணித்திருக்கும் தேவி ஸ்கந்தமாதா. உலகைக் காக்கும் பராசக்தி. காத்யாயனி வடிவ துர்க்கை, நான்கு கரங்களிலும் தாமரை, வாள், அபய, வரத முத்திரை தரித்தவள். ஆண்டாள் வழிபட்ட தேவி. நங்கையரின் நலன் காப்பவள். கருநிறம், கழுத்தில் மின்னல் ஒளிவீசும் மாலை, சிவந்த முக்கண்கள், கழுதை வாகனம் எனத் தோன்றும் காளராத்ரி துர்க்கை, பக்தர்களுக்கு அபயமும், துஷ்டர்களுக்கு
பயமும் அளிப்பவள்.

நிலவு போன்ற வெண்ணிறம், வெண்ணிற ஆடை, காளை மீதமர்ந்த பதினாறு வயதுக் குமரித் தோற்றம் கொண்ட துர்க்கை, மஹாகௌரி. துயரங்களைத் தீர்க்கவல்லவள். விஜயவாடா கனகதுர்க்கை ஆலயம், 51 சக்தி பீடங்களுள் ஒன்று. ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரத்தை இத்தேவியின் திருவுருமுன் பிரதிஷ்டை செய்துள்ளார். இத்தேவியை வணங்குவோர் வாழ்வு வளம் பெறும்.கர்நாடகா கட்டீல் துர்க்கா தேவி நேத்ராவதி நதியில் நடுவில் கொலுவிருக்கிறாள். வளையல், பாக்குப்பூ, சந்தானம், மைசூரு மல்லிகை போன்றவை பிரசாதமாக வழங்கப்படுகின்றன.

தொகுப்பு: அருள் ஜோதி

The post துக்கங்கள் களையும் துர்க்கையின் தோற்றங்கள் appeared first on Dinakaran.

Tags : Vanadurka ,Agathyar ,Kumkum ,Vindhyamalai ,Durga ,
× RELATED கோடையில் குளிர்ந்த நீர் அருந்தலாமா?