×

குஜராத் பெண்கள் மகிழும் கர்பா நடனம்!

நன்றி குங்குமம் தோழி

நவராத்திரி வடமாநிலங்களில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும் திருவிழா. அந்த ஒன்பது நாட்களும் ஆடல் பாடல் என நகரம் முழுவதுமே களைகட்டும். இதற்கு மிக முக்கிய காரணம் அவர்கள் வணங்கும் துர்கா தேவிதான். தேவியை வழிபடவே நவராத்திரி ஒன்பது நாட்களையும் அவர்கள் அங்கு விழா போல் கொண்டாடி வருகிறார்கள். துர்கா தேவியை பல மாநிலங்களில் வழிபட்டாலும் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வகையாக இந்த பெண் தெய்வத்திற்கு திருவிழாக்கள் நடைபெறும்.

மைசூரில் யானைகள் புடை சூழ தசரா பண்டிகை கொண்டாடப்படும். தமிழ்நாட்டில் ஒன்பது நாட்களும் கொலு பொம்மைகள் வைத்து கொண்டாடுவோம். தமிழ்நாட்டின் ஒரு பகுதியான திருநெல்வேலியில் குலசை மாரியம்மன் திருவிழாவில் கடவுள் வேடங்களில் வருவது தனிச்சிறப்பு. சில மாநிலங்களில் ஒன்பதாம் நாளன்று மகிஷாசூரனை உருவ பொம்மையாக செய்து, அதன் மீது பட்டாசுகள் வைத்து எரிய வைத்து கொண்டாடுவார்கள். இவை எல்லாம் அந்தந்த மாநிலத்தின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் பொறுத்து மாறுபடும். இந்த தனித்தன்மையான விஷயங்களே அந்த மாநிலத்தின் அடையாளமாகவே மாறிவிடுகிறது. அப்படியான ஒன்றுதான் குஜராத் மாநிலத்தில் நவராத்திரி விழாவின் போது நடக்கும் கர்பா நடனம். குஜராத் மாநிலத்தின் பாரம்பரிய நடனம் என்பதால், இன்றும் நவராத்திரியின் போது அதனை அங்கு பெண்கள் ஆடி வருகிறார்கள்.

குஜராத் மாநிலத்தில் இந்த நடனம் அறிமுகமானாலும், நடனத்தின் போது ஆண்கள், பெண்கள் அணியும் உடை மற்ற டான்டியா நடனத்தை விட மிகவும் தனித்தன்மையாக இருக்கும். கர்பா நடனம் இங்கு உருவானதற்கான வரலாற்று காரணமும் உள்ளது. இந்த நடனம் துர்கா தேவியை மகிழ்ச்சிப்படுத்தவே ஆடப்படுகிறது. முன்னொரு காலத்தில் வாழ்ந்த மகிஷாசூரன் என்ற அரக்கன் உலகம் முழுவதையும் நாசம் செய்து வந்தான். எந்தப் பெண்ணாலும் அவனை கொல்ல முடியாது.

தேவர்களால் கூட அவனை வெல்ல முடியாது என்று வரம் பெற்றிருந்தான். அதனாலேயே அவன் செய்த நாச வேலைகளை தடுக்க முடியவில்லை. இதனால் கடும் அவதியுற்ற தேவர்கள் விஷ்ணு விடம் உதவியை நாடி வந்தார்கள். அவன் செய்யும் அட்டகாசம் மற்றும் பெற்றிருக்கும் வரம் குறித்து விஷ்ணுவிடம் சொல்லி அவனை அழிக்க வேண்டும் என்று முறையிட்டனர். அவன் பெற்ற வரத்தால், அவனை அழிக்க பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் தங்களின் சக்திகளை இணைத்து துர்கா தேவியை உருவாக்கினர். தேவி ஒன்பது நாட்கள் மகிஷாசூரனுடன் போரிட்டு ஒன்பதாவது நாள் அவனை வதம் செய்தாள். இதனால் கடும் கோபத்தில் இருந்த துர்கை அம்மனை சாந்தப்படுத்தவும் மகிஷாசூரன் அழிந்ததற்காகவும் மக்கள் எல்லோரும் சேர்ந்து பாட்டு பாடி நடனமாடினார்கள். அவ்வாறு குஜராத் மாநிலத்தில் இப்படி ஆடிய நடனங்கள் கர்பா நடனம் என்று பெயர் பெற்றது.

கர்பா, சமஸ்கிருத வார்த்தையான கர்பதீப் என்பதிலிருந்து வந்தது. நவராத்திரி பண்டிகையானது வடமாநிலங்களில் துர்கா பூஜை அல்லது மஹோத்சவ் என்று அழைக்கப்படுகிறது. பண்டிகை காலத்தில் துர்கா தேவியை வித்தியாசமாக வடிவமைத்து வழிபடுகிறார்கள். அதில் கர்பா நடனம் ஒரு வடிவம். கர்பா என்பது ஒரு பெண்ணின் கருப்பையின் சின்னமாக கருதப்படுகிறது.

கார்போஸ் என்று அழைக்கப்படும் வட்ட வடிவ துவாரங்கள் கொண்ட பானையினை நடுவில் வைத்து அதைச் சுற்றி நடனம் ஆடுவார்கள். இதன் மூலம் தேவியை மகிழ்விப்பதாக ஐதீகம். இந்த நடனம் பெண்மையை மதிக்கிறது மற்றும் தாய் தெய்வங்களின் ஒன்பது வடிவங்களுக்கும் மரியாதை செலுத்துகிறது என்று குறிப்பிடுகிறார்கள் குஜராத் மக்கள். இந்த நடனம் நவராத்திரி ஒன்பது நாட்களும் நிகழ்த்தப்படுகிறது. ஆரம்ப காலத்தில் பெண்கள் மட்டுமே இதனை ஆடி வந்தார்கள். காலப்போக்கில் நடனத்தின் வசீகரத்தால் கவரப்பட்ட ஆண்களும் இதில்
பங்கேற்க தொடங்கினார்கள்.

நூற்றுக்கணக்கான பெண்கள் வண்ணமயமான சனியா சோளி என்ற உடையினை அணிந்து கொண்டு நடனமாடுவார்கள். மேலும் அதற்கு கனமான காதணிகள், வளையல்கள், நெக்லஸ்கள் அணிந்து தங்களை அலங்கரித்துக் ெகாள்கிறார்கள். ஆண்கள் காக்ராவுடன் முழங்கால்களுக்கு மேல் ஒரு குறுகிய குர்தா மற்றும் தலையில் பகடியுடன் கூடிய கஃப்னி பைஜாமாவை அணிவார்கள். பெண்கள் அணியும் உடைகளில் கண்ணாடிகள் பொருத்தப்பட்டு இருப்பதால், அவர்கள் ஆடும் போது சுற்றியுள்ள அனைத்தும்
வண்ணமயமாக தெரியும்.

மைதானத்தின் நடுவே துர்கா தேவியின் உருவம் வண்ணங்களாலும், விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு இருக்கும். மேலும் தண்ணீர் நிரப்பப்பட்ட பானைகளும் வைக்கப்பட்டு அதனை சுற்றி நடனமாடுவார்கள். மைதானம் முழுக்கவே வண்ண வண்ண தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். பாரம்பரிய கருவியான டேலக் இந்த நடனத்தில் இசைக் கருவியாக பயன்படுத்தப்படுகிறது. பெண்கள் இருகைகளையும் தட்டிக் கொண்டே நடனமாடும் போது, அந்த மைதானமே ேகாலாகலமாக காட்சியளிக்கும். ஆரம்பத்தில் மெதுவாக துவங்கப்படும் நடனம் நேரம் ஆக ஆக வேகம் அதிகரிக்கும்.

கர்பா நடனத்துக்கென்று தனியான நடன அசைவுகளும் உண்டு. இந்த நடன அசைவுகள் பார்வையாளர்களை கவரும் விதத்திலும், அவர்களையும் உடன் சேர்ந்து ஆடத் தூண்டும். நடனம் ஆடுபவர்கள் மட்டுமில்லை அதனை பார்ப்பவர்களும் ரசிப்பதாலேயே இன்று வரை சுவாரஸ்யம் குறையாமல் இருக்கிறது. நவராத்திரி மழை மற்றும் விவசாயம் செய்யும் காலத்தின் தொடக்க காலகட்டங்களில் நடைபெறும் விழா. மக்கள் அனைவரும் பக்தியோடும், மகிழ்ச்சியோடும் இந்த திருவிழாவில் கலந்து கொள்கிறார்கள். குஜராத்தின் கர்பா நடனம் உலகம் முழுவதும் பிரபலம் என்பதால், நவராத்திரி விழாவை காண உலகம் முழுதும் மக்கள் வருவது வழக்கமாக உள்ளது. கர்பா நடனத்தை போன்று சில நாட்டுப்புற நடனங்கள் இந்தியாவின் பல பகுதிகளிலும் முக்கியமாக தமிழ்நாடு, தென்கிழக்கு மற்றும் குஜராத்தின் வடகிழக்கு அண்டை நாடான ராஜஸ்தானில் காணப்படுகின்றன.

தொகுப்பு: மா.வினோத்குமார்

The post குஜராத் பெண்கள் மகிழும் கர்பா நடனம்! appeared first on Dinakaran.

Tags : kumkum doshi Navratri ,northern states ,
× RELATED வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு...