×

படிப்பு, எழுத்து என்ற இரு பழக்கமும் மனிதனை உயர்த்தும்

*நீலகிரி புத்தக திருவிழாவில் வரலாற்று ஆய்வாளர் செந்தலை கவுதமன் பேச்சு

ஊட்டி : படிப்பது, எழுதுவது என்ற இரு பழக்கங்கள் தான் ஒரு மனிதனை வாழ்க்கையில் உயர்த்தும். பொது அறிவை வளர்த்து கொள்ள புத்தகங்கள் பயில வேண்டும் என ஊட்டியில் நடைபெற்று வரும் நீலகிரி புத்தக திருவிழாவில் வரலாற்று ஆய்வாளர் செந்தலை நா.கவுதமன் பேசினார். ஊட்டியில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மைய வளாகத்தில் இரண்டாவது நீலகிரி புத்தக திருவிழா கடந்த 20ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது.

இதில் நாள்தோறும் பல்வேறு தலைப்புகளில் எழுத்தாளர்கள், வரலாற்று ஆய்வாளர்களின் சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. இதில், உயரத்தில் வைத்தோரும், உயர வைத்தோரும் என்ற தலைப்பில் வரலாற்று ஆய்வாளர் மற்றும் சொற்பொழிவாளர் செந்தலை நா.கவுதமன் பேசுகையில், ‘‘கல்வி கற்பதனால் மிகப்பெரிய உயரத்தை அடைய போகின்றவர்கள் மாணவர்களாகிய நீங்கள். எந்த ஒரு மனிதனையும் உருவாக்குவது புத்தகங்கள் தான். கல்வி கற்பதற்கான வாய்ப்பை வழங்கி இருப்பது புத்தக்கம் தான். பள்ளிக்கும், கல்லூரிக்கும் விடை கொடுத்தாலும், அதற்கு பின்னரும் உங்கள் வாழ்க்கையில் இணை பிரியாமல் இருக்க வேண்டியது புத்தகம் தான்.

யார் ஒருவர் புத்தகங்களோடு உறவாடுகிறார்களோ அவர்களுக்குதான் சமூகத்தில் முதலிடம் கிடைக்கும். இடைவிடாமல் வாசிப்பு பழக்கம் உள்ளவர்களுக்கு உணர்ச்சி சார்ந்த நோய்கள் வராது.
தமிழ்நாடு அரசு மாவட்டம் தோறும் புத்தக திருவிழா நடத்தி அதில் இயன்ற அளவு அனைவரையும் பங்கேற்க செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கு காரணம் மாணவர்களாகிய நீங்கள் அறிவை வளர்த்து கொள்வதுடன், உடல் நலத்தையும் பேண வேண்டும் என்பதற்காக தான். படிப்பதுடன், எழுதுவதையும் வழக்கமாக்கி கொள்ள வேண்டும். எழுதுவது என்பது ஒரு தவம். திரும்ப திரும்ப ஒன்றை எழுதுகின்றபோது கவனம் திசை திரும்பாது. மனம் ஒரு நிலையில் இருக்கும். மனநிலையை சீர்படுத்துவது எழுத்து பணி. அதனால் நீங்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எழுத பழகி கொள்ளுங்கள்.

சித்திரமும் கை பழக்கம், செந்தமிழும் நா பழக்கம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். படிப்பது, எழுதுவது என்ற இரு பழக்கங்கள் தான் ஒரு மனிதனை வாழ்க்கையில் உயர்த்தும். உடல்நலத்தை காக்கும். பள்ளி, கல்வி படிப்புக்கு வெளியில் ஒரு உலகம் உள்ளது. அதுதான் பொது அறிவு. பொது அறிவை வளர்த்து கொள்ள புத்தகங்கள் பயில வேண்டும். புத்தங்கள் பயில நேரத்தை ஒதுக்குவது போல், புத்தகம் வாங்க ஒரு தொகையை ஒதுக்க வேண்டும்.

கண்காட்சிக்கு வந்துள்ள மாணவர்கள் ஒவ்வொருவரும் இரு புத்தகங்களையாவது வாங்கி செல்ல வேண்டும். படிக்கின்ற பழக்கம் வாழ்வில் மாற்றத்தை உருவாக்கும். 25 வயது வரை நீங்கள் பெற்றோர், ஆசிரியர் மற்றும் உங்கள் வளர்ச்சியில் அக்கறை உள்ளோருக்கும் அடங்கி நடந்தால், அடுத்த 50 வருடங்களுக்கு உலகம் உங்களுக்கு அடங்கி இருக்கும். 25 வயது வரை மகிழ்ச்சியை இழந்தால் அடுத்த பல ஆண்டுகள் மகிழ்வோடு வாழலாம். மகிழ்ச்சியை இழந்தவர்கள் மட்டுமே மகிழ்ச்சியை பெற முடியும்.

வாழ்வில் உயர உறுதுணையாக இருந்தவர்களை மறக்காமல் நினைவில் வைக்க வேண்டும். ஏற்றி விட்டவர்களை மறப்பவர்கள், இறக்கி வைக்கப்படுவார்கள் என்றார். இந்நிகழ்ச்சியில் ஆவின் பொது மேலாளர் ெஜயராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post படிப்பு, எழுத்து என்ற இரு பழக்கமும் மனிதனை உயர்த்தும் appeared first on Dinakaran.

Tags : Nilgiri Book Festival ,Historian ,Sentala Gautham ,
× RELATED நீலகிரி புத்தக திருவிழா மாணவர்கள் கூட்டம் அலைமோதியது