×

மானங்காத்தானில் புதிய காலனி வீடுகள் திறப்பு விழா பெண் கல்விக்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்

*கனிமொழி எம்பி பேச்சு

கயத்தாறு : பெண் கல்விக்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று மானங்காத்தானில் புதிதாக கட்டப்பட்ட காலனி வீடுகளை திறந்து வைத்து கனிமொழி எம்பி பேசினார்.
கயத்தாறு யூனியன் தெற்கு இலந்தைக்குளம் பஞ்சாயத்திற்குட்பட்ட மானங்காத்தான் கிராம மக்கள், தூத்துக்குடி எம்பி கனிமொழியிடம் தாங்கள் வசிக்கும் காலனி வீடுகள் மிகவும் பழுதடைந்து இருந்ததை கூறி புதிய வீடு கட்டித்தர கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து அவரது முயற்சியால் சமூகப் பொறுப்பு நிதியில் இருந்து 20 பழுதடைந்த காலனி வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டுவதற்காக ரூ.80 லட்சம் ஒதுக்கீடு செய்தார். கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது முழுமையாக முடிவுற்ற 9 வீடுகளுக்கு நடந்த திறப்பு விழாவிற்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்தார். மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலை வகித்தனர். தெற்கு இலந்தைகுளம் பஞ். தலைவர் செல்வி ரவிக்குமார், துணை தலைவர் லட்சுமி பண்டாரம் வரவேற்று பேசினர்.

கனிமொழி எம்பி, புதிதாக கட்டப்பட்ட 9 வீடுகளை ரிப்பன் வெட்டி திறந்துவைத்து பேசுகையில், இக்கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று வீடு கட்டி தரப்பட்டுள்ளது. தேர்தலில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிப்படி மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு உள்ளது. மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் பதிவேற்றம் செய்யும்போது சில தவறுகளால் சிலருக்கு உரிமைத்தொகை கிடைக்காமல் இருக்கலாம். அதை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் தொகை கிடைக்கும். பெண் கல்விக்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். பெண்களை உயர்கல்வி படிக்க வைக்க வேண்டும். பெண்கள் தன்னம்பிக்கையுடன் சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்பதற்காக மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மற்றும் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை பெண்களுக்கு வழங்கி உள்ளனர், என்றார்.

பின்னர் பனிக்கர்குளம் சாலை அருகே 20 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை அவர் தொடங்கி வைத்தார். விழாவில் பிடிஓ சுப்புலட்சுமி, தாசில்தார் நாகராஜன், மண்டல துணை தாசில்தார் தங்கையா, கயத்தாறு யூனிய்ன அலுவலக மேலாளர் சுப்பையா, திமுக ஒன்றிய செயலாளர்கள் கருப்பசாமி, சின்னப்பாண்டியன், மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ், கயத்தாறு பேரூராட்சி துணை தலைவர் சபுரா சலீமா, சுற்றுச்சூழல் அணி இணை ஒருங்கிணைப்பாளர் ராஜதுரை, திட்டக்குழு உறுப்பினர் அய்யாத்துரை, பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ், கயத்தாறு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் கோதண்டராமர், பஞ். முன்னாள் தலைவர் செல்லையா, பேரூர் செயலாளர் சுரேஷ்கண்ணன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் மாரியப்பன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post மானங்காத்தானில் புதிய காலனி வீடுகள் திறப்பு விழா பெண் கல்விக்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : New Colony Houses ,Manangathan ,Kanimozhi ,Kayathar ,Manangatan ,
× RELATED நாட்டை காப்பாற்ற வேண்டிய தேர்தல்;...