×

கே.வி.குப்பம் அருகே 13 ஆண்டுகால தகராறுகளுக்கு மத்தியில் சக்தி காளியம்மன் கோயிலுக்கு மீண்டும் பூட்டு

*வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை

கே.வி.குப்பம் : கே.வி.குப்பம் அருகே கோயிலை நிர்வாகம் செய்வதில் 13 ஆண்டுகால தகராறுகளுக்கு மத்தியில் இருதரப்பினர் இடையே நடந்த சமரச கூட்டத்தில் சுமூக தீர்வு ஏற்படாததால் சக்தி காளியம்மன் கோயில் மீண்டும் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது.வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த காளம்பட்டு மலையடிவாரத்தில் சக்தி காளியம்மன் கோயில் உள்ளது. 200 ஆண்டு பழமையான இக்கோயில் குடிசையாக இருந்தது. கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் புதிதாக திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் திருவிழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அப்போது கோயில் நிர்வாகம் செய்வது தொடர்பாக இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதன் காரணமாக வருவாய்துறை, அறநிலையத்துறையினர் கோயிலை பூட்டி ‘சீல்’ வைத்தனர். தொடர்ந்து ஆண்டுேதாறும் நவராத்திரி நாளில் கோயிலில் கொலு வைத்து வழிபாடு நடத்த பக்தர்கள் அனுமதி கேட்டனர். இதனால் ஆண்டுதோறும் 10 நாட்கள் மட்டும் கோயிலை திறந்து வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு வழக்கம்போல் நவராத்திரிக்கு அனுமதி கேட்டு கோயிலை திறந்து வழிபாடு நடத்தப்பட்டு வந்தது.

வழிபாட்டின்போது, ஒரு தரப்பினர் கோயிலில் உள்ள உற்சவர் சிலையை மட்டும் வெளியே எடுத்துச்சென்று ராமர் கோயிலில் வைத்து வழிபடுவதற்காக அனுமதி கேட்டனர். இதற்கு மற்றொரு தரப்பினர், கொலுவில் உள்ள அம்மனை தர முடியாது’ என மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக சமரச கூட்டம் கோயிலில் நேற்றுமுன்தினம் நடந்தது.

குடியாத்தம் கோட்டாட்சியர் வெங்கட்ராமன், கே.வி.குப்பம் தாசில்தார் கலைவாணி, பனமடங்கி இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு ஆகியோர் நேற்று முன்தினம் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் சுமூக முடிவு எட்டப்படவில்லை. இதனால் அதிகாரிகள் மீண்டும் கோயிலை பூட்டி ‘சீல்’ வைத்தனர். 13 ஆண்டுகளாக பூட்டப்பட்ட கோயிலில், சிறப்பு அனுமதி பெற்று வழிபட்ட நிலையில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக மீண்டும் பூட்டு போட்டதால் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் வேதனை அடைந்தனர்.

The post கே.வி.குப்பம் அருகே 13 ஆண்டுகால தகராறுகளுக்கு மத்தியில் சக்தி காளியம்மன் கோயிலுக்கு மீண்டும் பூட்டு appeared first on Dinakaran.

Tags : KV Kuppam ,Shakti Kaliamman ,Sakthi Kaliamman ,KV ,Kuppam ,Dinakaran ,
× RELATED உழவு செய்தபோது தந்தை கண்முன் டிராக்டரில் சிக்கி மகன் நசுங்கி பலி