சென்னை : மாமன்னன் ராஜராஜ சோழனின் வீரத்தையும், ஆளுமையையும் எந்நாளும் போற்றி வணங்குவோம் என்று தினகரன் தெரிவித்துள்ளார். 1038 வது சதய விழா நேற்று தொடங்கிய நிலையில், சதய நட்சத்திர நாளான இன்று மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.அதன்படி தஞ்சை ஆட்சியர் தீபக் ஜேக்கப் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், “மன்னர்கள் காலத்திலேயே மக்களாட்சி முறையை நடைமுறைப் படுத்திய மாமன்னரும், சோழ சாம்ராஜ்யத்தின் பிரம்மாண்ட வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவருமான பொன்னியின் செல்வன் ராஜராஜசோழனின் 1038 வது சதயவிழா இன்று.
ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் உலகப் புகழ் பெற்றதாக திகழும் தஞ்சை பெரிய கோவிலை கட்டியதோடு, சிறந்த நிர்வாகம், நீர் மேலாண்மை, விவசாயம், கட்டடக்கலை, பொதுமக்களின் பொருளாதார வளர்ச்சி என அனைத்து துறைகளுக்கும் வழிகாட்டியாக திகழ்ந்த மாமன்னன் ராஜராஜ சோழனின் வீரத்தையும், ஆளுமையையும் எந்நாளும் போற்றி வணங்குவோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
The post மாமன்னன் ராஜராஜ சோழனின் வீரத்தையும், ஆளுமையையும் எந்நாளும் போற்றி வணங்குவோம் : டிடிவி தினகரன் appeared first on Dinakaran.