×

மைசூர் அரண்மனையில் உலக புகழ்பெற்ற தசரா விழா: இறுதி நாளில் களைகட்டிய நிகழ்ச்சிகள்

மைசூர்: கர்நாடக மாநிலம் மைசூருவில் விமரிசையாக நடைபெற்ற உலக புகழ்பெற்ற தசரா விழா தீப்பந்த சாகச நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது. கர்நாடக மாநிலம் மைசூர் அரண்மனையில் கடந்த 9 நாட்களாக நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வந்தது. இதை ஒட்டி அரண்மனை முழுவதும் வண்ணவிளக்குகளால் ஜொலித்தது தசரா விழாவின் கடைசி நாளாக நேற்று மைசூர் அரண்மனை வளாகத்தில் குஸ்தி உள்பட ஏராளமான கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கர்நாடக மாநிலத்தில் பாரம்பரியத்தை பறைசாற்றும் இசை, நடனம்,வாழ்வியல் முறைகளை விளக்கும் அலங்கார ஊர்திகள் நகரின் முக்கிய சாலைகளில் அணிவகுத்து சென்றன. இதனால் மைசூர் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. இதை தொடர்ந்து தசரவிழாவின் முக்கிய நிகழ்வான ஜம்புசவாரி ஊர்வலம் நடைபெற்றது. 750 கிலோ எடைகொண்ட தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி அம்மனை சுமந்துகொண்டு அபிமன்யு என்ற யானை தலைமையில் 14 யானைகள் மைசூரு நகரின் முக்கிய சாலைகளிலும் ஊர்வலமாக சென்று பின்னர் அரண்மனைக்கு சென்றனர்.

பல வண்ண மலர்களால் தங்க அம்பாரியையும் அதனை சுமந்து சென்ற அலங்கரிக்கபட்ட யானைகளின் ஊர்வலத்தையும் கர்நாடக மக்கள் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து திரண்டிருந்த லட்சக்கணக்கானோர் கண்டு ரசித்தனர். தசரா ஜம்பு சவாரி முடிந்த பின்னர் அரண்மனை வளாகத்தில் நடைபெற்ற தீ பந்த சாகச விளையாட்டு நிகழ்ச்சிகளை மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் தொடங்கிவைத்தார். முன்னதாக காவலர்கள், ஆயுதப்படை, குதிரைப்படை, தேசிய மாணவர் படை, கமாண்டோ படையினரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.

காவல்துறையினரின் மோட்டார் சைக்கிள் மற்றும் குதிரைப்படை பிரிவினரின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து இரவில் லேசர் ஒளிக்கதிர்கள் பளிச்சிடும் கண்கவர் நிகழ்ச்சிகள் அரங்கேறின. 2 மணிநேரம் நடைபெற்ற இந்நிகழ்ச்சிகளை பல்லாயிர கணக்கான மக்களுடன் கர்நாடக மாநில ஆளுநர் அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் உள்ளிட்டோர் கண்டுரசித்தனர். ரசிக்கவைத்த பல்வேறு அம்சங்களுடன் நடந்த தசரா விழா பண்டிகை உற்சாகத்துடன் கோலாகலமாக நிறைவடைந்தது.

The post மைசூர் அரண்மனையில் உலக புகழ்பெற்ற தசரா விழா: இறுதி நாளில் களைகட்டிய நிகழ்ச்சிகள் appeared first on Dinakaran.

Tags : World famous Dussehra festival ,Mysore Palace ,Mysore ,Dussehra ,Mysuru, Karnataka ,Karnataka… ,
× RELATED மசாலாக்களின் மறுபக்கம்…