×

முட்டைகளை வீட்டில் இறக்கி வைத்த வேன் சிறைபிடிப்பு ஒடுகத்தூர் அருகே பரபரப்பு அங்கவாடி மையத்தில் வைக்க வேண்டிய

ஒடுகத்தூர், அக்.25: ஒடுகத்தூர் அருகே அங்கன்வாடி மையத்திற்கு வந்த முட்டைகளை சத்துணவு அமைப்பாளர் தனது வீட்டில் இறக்கி வைத்ததால் அப்பகுதி மக்கள் வேனை சிறை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒடுகத்தூர் அடுத்த கீழ்கொத்தூர் கிராமத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்கள் இயங்கி வருகிறது. இந்த அங்கன்வாடியில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு சார்பில் இலவச முட்டை நாள்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இங்கு சத்துணவு அமைப்பாளராக அதே பகுதியை சேர்ந்த கலைச்செல்வி(39), என்பவர் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், அங்கன்வாடி மையத்திற்கு நேற்று மதியம் வேன் மூலம் முட்டை கொண்டுவரப்பட்டது. அப்போது, முட்டையை அங்கன்வாடி மையத்தில் இறக்கி வைக்காமல் கலைச்செல்வி தனது வீட்டில் இறக்கி வைத்துள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த ஒன்றிய கவுன்சிலர் கணபதி, ஊராட்சி மன்ற தலைவர் உதயகுமார் மற்றும் பொதுமக்கள் வேனை சிறைபிடித்து அவர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், வீட்டில் இருந்த முட்டைகளை மீண்டும் வேனில் எடுத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட பள்ளியில் இறக்கி வைக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்; கீழ்கொத்தூர் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு அரசு சார்பில் அனுப்பப்படும் முட்டைகள் அங்கன்வாடி மையத்தில் வைக்காமல் சத்துணவு அமைப்பாளர் அவரது வீட்டில் இறக்கி வைத்து கொள்கிறார். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

The post முட்டைகளை வீட்டில் இறக்கி வைத்த வேன் சிறைபிடிப்பு ஒடுகத்தூர் அருகே பரபரப்பு அங்கவாடி மையத்தில் வைக்க வேண்டிய appeared first on Dinakaran.

Tags : Senshu Angwadi center ,Odugathur ,Sathunavu ,Anganwadi center ,
× RELATED காளை விடும் திருவிழாவில் ஆக்ரோஷமாக...