×

தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்களை தடுக்கும் நடவடிக்கை ஆராய குழு அமைப்பு நேரடி ஆய்வு செய்த டிஐஜி, எஸ்பி தகவல் செங்கம் அருகே புதுச்சேரி- பெங்களூரு

திருவண்ணாமலை, அக்.25: செங்கம் அருகே தொடர்ந்து சாலை விபத்துக்கள் நடைபெறுவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வேலூர் சரக டிஐஜி முத்துசாமி நேரடி ஆய்வு நடத்தினார். மேலும், குறிப்பிட்ட சாலையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே கடந்த 15ம் தேதி மேல்மலையனூர் சென்று திரும்பிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் காரும், லாரியும் மோதிய விபத்தில் பலியானார்கள். இந்த சம்பவத்தின் துயரம் குறையும் முன்பே, நேற்று முன்தினம் புதுச்சேரியில் இருந்து ஒசூருக்கு காரில் சென்ற தனியார் நிறுவன தொழிலாளர்கள் உட்பட 7 பேர் காரும், அரசு பஸ்சும் நேருக்குநேர் மோதிய விபத்தில் பலியானார்கள்.

இந்த 2 விபத்துக்கள் நடந்ததும், கலெக்டர் முருகேஷ், எஸ்பி கார்த்திகேயன், செங்கம் தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி மற்றும் அதிகாரிகள் விரைந்துச் சென்று மீட்புப் பணிகளை விரைவுபடுத்தினர். விபத்தில் பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதேபோல், படுகாயம் அடைந்தவர்களுக்கு அரசு சார்பில் உயர் மருத்துவ சிகிச்சைக்கும் நடவடிக்ைக எடுக்கப்பட்டது. இந்நிலையில், இந்த 2 கோர விபத்துக்களும், செங்கம்- மேல்செங்கம் தேசிய நெடுஞ்சாலையில் குறிப்பிட்ட சாலை பகுதியில் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு, அந்த குறிப்பிட்ட சாலைப் பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறும் பகுதியாக கண்டறியப்பட்டு உள்ளன.

எனவே, திருவண்ணாமலையில் இருந்து செங்கம் வழியாக பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திருவண்ணாமலை மாவட்ட எல்லை வரை உள்ள சாலையில் விபத்துக்கள் நடைபெறாமல் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து, வேலூர் சரக டிஐஜி முத்துசாமி, திருவண்ணாமலை எஸ்பி கார்த்திகேயன் ஆகியோர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர். அதற்காக, சுமார் 60 கி.மீ. தூரம் காரில் பயணம் செய்து, விபத்து ஏற்படும் பகுதிகள், பார்வை குறைந்த சாலை வளைவுகள், வேகத்தடைகள் மற்றும் விபத்து பகுதி எனும் எச்சரிக்கை பலகைகள் அமைக்க வேண்டிய இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

புதுச்சேரியில் இருந்து பெங்களூரு செல்லும் இந்த தேசிய நெடுஞ்சாலையில் கனரக வாகனங்களின் பயன்பாடு அதிகம் உள்ளது. மேலும், மாநிலங்களை கடந்து செல்லும் சுற்றுலா வாகனங்கள், மற்றும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகம். எனவே, முதன்முறையாக அல்லது ஆண்டுக்கு ஒருமுறை, இருமுறை என இந்த சாலையில் வாகனங்களில் பயணிப்போருக்கு, சாலை குறித்த முன் அனுபவ குறைவினால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே, இந்த விபத்துக்களை முற்றிலுமாக கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து ஆராய, காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துத்துறை, வட்டார போக்குவரத்துத்துறை ஆகியவற்றை ஒருங்கிணைத்து, குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் 2 நாட்களில் அறிக்கை அளிக்க உள்ளனர். அதன் அடிப்படையில், திருவண்ணாமலையில் இருந்து மேல்செங்கம் வரையிலான தேசிய நெடுஞ்சாலையில், விபத்து தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

The post தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்களை தடுக்கும் நடவடிக்கை ஆராய குழு அமைப்பு நேரடி ஆய்வு செய்த டிஐஜி, எஸ்பி தகவல் செங்கம் அருகே புதுச்சேரி- பெங்களூரு appeared first on Dinakaran.

Tags : DIG ,Sengam ,Puducherry-Bengaluru ,Thiruvannamalai ,Vellore Saraka ,
× RELATED ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள் செங்கம் பஜார் வீதியில்